பட்டுக்கோட்டை நகராட்சியின் திமுக சேர்மன் சண்முகப்பிரியா. இவரது கணவர் செந்தில்குமார் திமுக நகரச் செயலாளராக இருக்கிறார். சேர்மனுக்கு எதிரான கருத்தை முன் வைத்த எட்டு திமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சேர்மன் சண்முகபிரியா தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சேர்மன் தங்கள் வார்டுகளை புறக்கணிப்பதாக கூறி ரகுராமன், சாந்தி, பிரியா, மகாலட்சுமி, குமார், ராமலிங்கம், ரவிக்குமார், கோமதி ஆகிய எட்டு திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திமுக கவுன்சிலர்கள் சிலரிடம் பேசினோம், “திமுக சேர்மன் சண்முகப்பிரியா எட்டு திமுக கவுன்சிலர்களின் வார்டுகளை முற்றிலும் புறக்கணித்து விட்டார். எங்கள் வார்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. சேர்மன் தேர்தல் சமயத்தில் நாங்கள் வேறு ஒருவருக்கு சேர்மன் பதவிக்கு சப்போர்ட் செய்ததை மனதில் வைத்து காழ்ப்புணர்ச்சியில் எங்கள் வார்டுகளை புறக்கணிக்கிறார். அதிமுகவினர் கவுன்சிலர்களாக உள்ள வார்டுகளில் கோடி கணக்கில் வளர்ச்சி பணிகளை செய்துள்ளனர்.
திமுக குறித்தும், முதல்வர், துணை முதல்வரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்கின்ற அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சேர்மனுக்கு வாக்களித்த நாங்கள் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறோம். இந்த மூன்று வருடத்தில் நாங்கள் சேர்மனால் அனுபவிக்காத வேதனை இல்லை. எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என பல முறை சேர்மன் தரப்பில் பேசியும் அவர் எங்கள் வார்டுகளை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான், எங்களை புறக்கணிக்கும் சேர்மனை கண்டித்து காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக 12 மணி நேரம் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இதையறிந்த திமுக எம்.பி முரசொலி, எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம்-னு போராட்டத்தை வாபஸ் வாங்கச் சொன்னதால் தற்காலிகமாக வாபஸ் வாங்கியிருக்கிறோம். எங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் தொடங்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம்” என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
