பிரதமர் மோடி குறித்த கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது. இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 6-ம் தேதி நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.
இந்த வழக்கில் விகடன் நிறுவனத்துக்காக வழக்கறிஞர் ராகுல் உன்னிகிருஷ்ணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…
`அரசியல் விமர்சனத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமே’
`பிப்ரவரி 10-ம் தேதி வெளியான விகடன் பிளஸ் இதழில் வெளியிடப்பட்ட கார்ட்டூன், தேசத்தின் இறையாண்மையையும் இரு நாட்டு உறவுகளின் வலுவையும் குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மனுதாரரின் (விகடன்) இணையதளம் நிரந்தரமாக முடக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மனுதாரர் ரிட் மனுவை சமர்பித்திருந்தனர்.
மனுதாரரான விகடனின் தரப்பில், ‘குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் தேசத்தின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் குலைப்பதாக இல்லை. அந்த கார்ட்டூன் என்பது அரசியல் விமர்சனத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமே’ என வாதிடப்பட்டது.
இதற்கான எதிர்வாதத்தை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்தார். அதாவது, ‘விகடன் பிளஸ் இதழில் வெளியான அந்த கார்ட்டூன் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 69A வை மீறுவதாக உள்ளது. நியாயமான காரணங்களுக்காக அடிப்படை உரிமைகளை முடக்கும் வாய்ப்பையும் அந்த சட்டப்பிரிவு அரசுக்குக் கொடுக்கிறது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் துறை சார்ந்த கமிட்டியும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்துள்ளது. அதன்படி, மனுதாரரை அந்த கார்ட்டூனை இணையதளத்திலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

`இணையதளத்தை உடனடியாக முழுமையாக இயங்க…’
கேள்விக்குரிய அந்த கார்ட்டூன் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கலை வடிவம் ஆகியவற்றின் கீழ் பார்க்கப்பட வேண்டுமா அல்லது 69 A சட்டப்பிரிவின் கீழ் பார்க்கப்பட வேண்டுமா என நீதிமன்றம் சார்பில் கேள்வியாக முன்வைக்கப்பட்டது. அதற்கு இது சம்பந்தமான பதில் மனுவைத் தாக்கல் செய்ய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டார்.
அந்த ஒரு கார்ட்டூன் மட்டும்தான் கேள்விக்குரியது என்பதால், அதைத் தவிர அந்தத் தளத்தின் எல்லா பக்கங்களும் வாசகர்களால் பயன்படுத்த முடிகிற வகையில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த கார்ட்டூனை மட்டும் நீக்கவேண்டும்.

அந்த கார்ட்டூன் நீக்கப்பட்ட பிறகு மனுதாரர், அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் சொல்ல வேண்டும். இந்த தீர்ப்பின் நகல் கிடைக்கும் வரை கூட காத்திராமல் இணையதளத்தின் முடக்கத்தை உடனடியாக இன்றே மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
