முதன்மையாவரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கான ஏற்பாடு, ‘ரன்னிங்’ மாண்புமிகுவிடம் வழங்கப்பட்டிருந்தது. அதில் ஏகப்பட்ட குளறுபடி அரங்கேறியதாலும், தலைமை அதை கவனித்து கேட்டதாலும் மாண்புமிகு இப்போது செம கடுப்பில் இருக்கிறாராம். விழாவுக்குக் கிட்டத்தட்ட 40,000 பேர் உட்காரும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றாலும், பின்வரிசையில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் காலியாகவே கிடந்தன. இது திட்டமிட்டே நிகழ்ந்த ஒன்றுதானாம். அதாவது, தலைமை மாண்புமிகுவின் மாவட்டத்திலுள்ள பகுதிப் புள்ளிகள், ‘நாம என்ன வேலை பார்த்தாலும் கடைசியில தலைமைகிட்ட, அவர்தான் பேரு வாங்கிட்டுப் போறாரு. நாம வேலை பார்க்குறதே தலைமைக்குத் தெரியிறது இல்லை. பிறகு எதுக்கு நாம வேலை பாக்கணும்..?’ எனத் திட்டமிட்டே உள்ளடி வேலை பார்த்துவிட்டார்களாம். இதில் கடுப்பாகிப்போன ‘ரன்னிங்’ மாண்புமிகு, யார், எத்தனை பேரை அழைத்து வந்தார்கள் என்கிற விசாரணையில் இறங்கியிருக்கிறாராம்!
கடலோர மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மையானவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், சூரியக் கட்சியினரே கூச்சத்தில் நெளியும் அளவுக்கு, முதன்மையானவரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டாராம் லோக்கல் சிறுத்தைப் புள்ளி. “மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட ஆசைப்படுகிறார் அந்த சிறுத்தைப் புள்ளி. அதற்கு சூரியக் கட்சியின் தயவும் வேண்டும். அதேநேரத்தில், சிறுத்தைக் கட்சித் தலைமையின் போக்கிலும், லோக்கல் சிறுத்தைப் புள்ளிக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இப்போதே சூரியக் கட்சியில் ஒரு துண்டைப் போட்டுவைத்துவிட்டார். தன்னுடைய கட்சியில் நெருக்கடி அதிகமானால், சூரியக் கட்சிக்குத் தாவிவிடும் எண்ணத்திலும் இருக்கிறார். அதனால்தான், அன்றைய பேச்சில் அப்படியொரு புகழாரம்” என்கிறார்கள் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே!
சமீபத்தில், சூரியக் கட்சித் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியைத் தலைநகரில் தடபுடலாகக் கொண்டாடினார் ‘ஆன்மிக’ மாண்புமிகு. விழா முடிந்து, மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அப்போது பலரும் முண்டியடித்துக்கொண்டு மேடைக்குக் கீழே வரவே, கடுமையாகத் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்ய கோதாவில் இறங்கிய ‘ஆன்மிக’ மாண்புமிகு, வரிசையில் நின்றுகொண்டிருந்த மகளிரணிப் பகுதி நிர்வாகி ஒருவரின் தலையில் ஓங்கி அடித்துவிட்டாராம். அதில், டென்ஷனான அந்தப் பெண் நிர்வாகி, தன்னுடைய ஐ.டி கார்ட்டைக் கழற்றி வீசிவிட்டுக் கண்ணீரும் கம்பலையுமாக அங்கிருந்து கிளம்ப, அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது. ‘பொது இடத்தில் வைத்து ஒரு பெண்ணை அடித்திருக்கிறார் அந்த மாண்புமிகு. அதை, அங்கிருந்த கட்சி சீனியர்கள் யாருமே கண்டிக்கவில்லை’ எனக் கொதிக்கிறார்கள் ஏரியா உடன்பிறப்புகள்!
சூரியக் கட்சியைச் சேர்ந்த ‘ஜில்’ மாவட்டத் தலைமை நிர்வாகியின் பதவி சமீபத்தில் பறிபோனது. ஆனாலும் அவருடைய வாரிசான ‘கிங்’ பிரமுகர், சகல அதிகாரங்களுடன் அங்கு பவனிவருகிறாராம். கமிஷனர் மாற்றம் முதல் கவுன்சிலர்களைக் குளிர்விப்பது வரை அனைத்திலும் ‘கிங்’ பிரமுகர்தான் எல்லாமுமாக இருக்கிறாராம். “மாவட்டத்தின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் நகராட்சியில், பெயருக்குத்தான் பெண் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், அதிகாரமெல்லாம் ‘கிங்’ பிரமுகரிடம்தான் இருக்கிறது. நகராட்சி சந்தை விவகாரம் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். அந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்களை இனிப்பு மழையில் நனைத்துவிட்டு, தீர்மானத்தைச் சாதித்துவிட்டார் ‘கிங்’ பிரமுகர். அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளையும் வளைத்துவிடுகிறார். இதில் கடுப்பான இலைக் கட்சித் தலைமை, ‘ஆடு பகை… குட்டி உறவா…?’ எனக் கேட்டு, தங்கள் கட்சி கவுன்சிலர்களை வறுத்தெடுத்தது தனிக்கதை” என்கிறார்கள் ‘ஜில்’ மாவட்ட உடன்பிறப்புகள்!
தன்னைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் தேனிக்கார ‘வாசனை’ பிரமுகருக்கு ‘செக்’ வைக்கும்விதமாக, அவரது ஊரிலேயே பொதுக்கூட்டம் நடத்தினார் எடக்கானவர். ஆனால், ஒட்டுமொத்தக் கூட்டமும் டோட்டலாகச் சொதப்பிவிட்டதாம். ‘கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ‘சைன்ரைஸ்’ புள்ளிதான் கவனித்தார். ஆனால், சொந்த பர்ஸைத் திறக்காமல், லோக்கல் நிர்வாகிகளையே செலவுகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். அதில் உடன்படாத லோக்கல் நிர்வாகிகள், மொத்தமாக நழுவிவிட்டார்கள். அதன் தாக்கம்தான், விழாவில் காலியாகக் கிடந்த சேர்களில் எதிரொலித்திருக்கிறது. “50,000 பேரைத் திரட்டுவோம் என அறிவித்தவர்களால் 5,000 பேரைக்கூடத் திரட்ட முடியவில்லை. இதனால், மூக்கு உடைபட்ட ‘சைன்ரைஸ்’ புள்ளி ஏக வருத்தத்தில் இருக்கிறார். அதேபோல, கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் நடந்த சொதப்பலால், தலைமையும் ஏக கடுப்பில் இருக்கிறது” என்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
