இந்தி திணிப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “நம்முடைய பிரதமருக்கு தமிழ் மீது மிகுந்த பற்றிருக்கிறது என்று பாஜக கூறுவது உண்மையெனில், ஏன் அது செயலில் பிரதிபலிக்கவில்லை?
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை (இன்ஸ்டால்) விடுத்து, தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியை நீக்கலாம் (அன் – இன்ஸ்டால்). வெற்று பாராட்டுகள் அல்லாமல், இந்திக்கு இணையாக தமிழ் மொழியை அலுவல் மொழி ஆக்கலாம். செத்துப்போன சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கும் பணத்தை விட, தமிழுக்கு அதிக பணங்களை செலவிடலாம்.


திருவள்ளுவருக்கு காவியை பூசுவதற்கான முயற்சிகளை விடுத்து, அவரது திருக்குறளை இந்தியாவின் தேசிய நூல் ஆக்கலாம். ஒன்றிய பட்ஜெட்டுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது போதாது. தமிழ்நாட்டுக்கென புதிய சிறப்பு திட்டங்கள், இயற்கை பேரிடர் நிதி, புதிய ரயில்வே திட்டங்களை என கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ‘இந்தி பக்வாடாஸ்’காக வரி செலுத்துபவர்களின் பணத்தை வீணாக்காதீர்கள். தமிழ்நாட்டு ரயில்களுக்கு அந்தியோதயா, தேஜஸ், வந்தே பாரத் போன்ற சமஸ்கிருத பெயர்களை வைக்கும் அபத்தத்தை நிறுத்துங்கள். அதற்கு பதில் செம்மொழி, முத்துநகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்களை வைக்கும் பழக்கத்திற்கு திரும்புங்கள்.
வார்த்தைகள் மூலம் அல்ல, செயலின் மூலம் தமிழ் மீதுள்ள அன்பை நிரூபியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
