‘தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி; தென்மாநிலங்களின் கூட்டுக்குழு!’ – முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்

அந்தவகையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக, தமாக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்று இருக்கின்றனர்.

`தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி’

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” தமிழ்நாடு அரசு சார்ப்பில் இங்கு வந்திருக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்கிறேன். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு மக்களவை தொகுதியின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக மக்கள் தொகையைக் கணக்கிட்டப்பிறகுதான் இப்படி செய்வார்கள்.

அனைத்துக்கட்சி கூட்டம்

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றிப் பெற்றிருக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்கள், பெண்கள் கல்வி மூலம் இதனை சாதித்திருக்கிறோம். மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் உள்ளது. நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள மாநிலங்களுக்கு இது தண்டனையாக அமையும். அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தென்மாநிலங்களின் கூட்டுக் குழு ஒன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய அரசியல் பிரதிநிதிதுவத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நலனிற்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாமற்றது. அந்த வகையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் தொடரவேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel