அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசி வந்தார். இது அதிமுக மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
மோதல்… இந்நிலையில், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பூத் கமிட்டி அமைப்பு மற்றும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, கே.ஏ.செங்கோட்டையன் பேசத் தொடங்கியபோது,”அந்தியூரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் எழுந்து, அந்தியூர் பகுதி அதிமுக நிர்வாகிகளை அழைக்காமல் கூட்டம் நடத்துவதாக சப்தம் போட்டார். இதனால், தனது பேச்சை நிறுத்திய செங்கோட்டையன் பிரவீனை மேடைக்கு அழைத்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், பிரவீன் செங்கோட்டையனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை தாக்கி மேடையில் இருந்து இறக்கிவிட்டனர்.

தொடர்ந்து, நாற்காலிகளை பிரவீன் மற்றும் அவருடன் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு பிரவீனுடன் வந்திருந்தவர்களும் நாற்காலியைத் தூக்கி வீசினர். இதனால், செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நிலைமையை சரி செய்த செங்கோட்டையன் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ஏ.கே.செல்வராஜ் பிரவீனையும், அவருடன் வந்திருந்தவர்களையும் வெளியேற்றினர்.
பின்னர் பேசத் தொடங்கிய செங்கோட்டையன், “தற்போது பிரச்னை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த இ.எம்.ராஜாதான். அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்னை செய்துள்ளார். கடந்த தேர்தலின்போது, அதிமுக-வுக்கு வாக்கு செலுத்தாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா. அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்துவிட்டு இப்போது குழப்பத்தை ஏற்படுத்த ஆள்களை அனுப்பியுள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு எல்லாம் இறைவன் தண்டனை தருவான்” என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். “கொங்கு பகுதியான ஈரோட்டில் மிக மூத்த நிர்வாகி செங்கோட்டையன். ஆனால், கட்சி நிர்வாகிகள் நியமனத்தின்போது, அவரை ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்கிற அதிருப்தி செங்கோட்டையனுக்கு உள்ளது. அந்தியூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான இ.எம்.ராஜாவை அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் நியமித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் ஆலோசிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தனது உறவினர் என்பதால் அவரது பரிந்துரையை மட்டும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்கிறார். செங்கோட்டையனை கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அவர் தனது அதிருப்தியை வெளிகாட்டத் தொடங்கியுள்ளார்” என்றனர்.