Ukrainian: “ரஷ்யா `இதை’ விரும்பவில்லை” – என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ‘இந்தப் போர் எப்போது முடியும்?’ என்று உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பில் கூட, ‘ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை விரும்பவில்லை’ என்று தான் வார்த்தைப்போர் முற்றியது.

இந்த நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில், “உக்ரைன் தன்னுடைய சாதாரண மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காகத் தான் போராடிக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் அமைதிக்காகவே. எங்களுக்கு இந்தப் போர் நிறைவுற வேண்டும். ஆனால், ரஷ்யாவிற்கு அப்படியில்லை. ரஷ்யா இன்னும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும், உக்ரைன் நாட்டையும், அதன் மக்களையும் அழிக்க 1,050-க்கும் அதிகமான ட்ரோன் தாக்குதல்கள், கிட்டதட்ட 1,300 வான்வழி குண்டுகள், 20-க்கும் அதிகமான ஏவுகணைகளை அனுப்பியுள்ளது ரஷ்யா.

பேச்சுவார்த்தை வேண்டும் என்று கூறுபவர்கள் மக்களை ஏவுகணைகளை கொண்டு தாக்கமாட்டார்கள். ரஷ்யா எங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த உலகின் ஒருங்கிணைந்த ஆதரவு வேண்டும்.

எங்களது வான்வழி பாதுகாப்பு, ராணுவம், பாதுகாப்பு ஆகியவற்றை பலப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவின் தாக்குதலை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். அதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஒற்றுமையின் சக்தியை நம்புகிறோம். நிச்சயம் அமைதியை நிலைநாட்டுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel