உலக அளவில் விவசாயத்தில் நடைபெற்று வரும் மாபெரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2007-ம் ஆண்டு பசுமை விகடன் இதழ் தொடங்கப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளாக ஒற்றை நாற்று நடவு, மதிப்புக் கூட்டல், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் என மாவட்டந்தோறும் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டு இருக்கிறது.
அந்த வகையில் ஆனந்த விகடன் குழுமம் 7-வது முறையாக நடத்தும் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2025’ என்னும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி மார்ச் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை(வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாள்கள் திருச்சியில் நடைபெற உள்ளது.
முதல் நாள்
மார்ச் 7ம் தேதி காலை 10 மணிக்கு பசுமை விகடன் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் விவசாயியுமான மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள். தன்னுடைய 150 ஏக்கர் விவசாய நிலத்தில் மேற்கொண்டு வரும் நெல் சாகுபடி, மாடு வளர்ப்பு குறித்தும் விவசாயம் தனக்கு எவ்வளவு நெருக்கம் என்பது குறித்தும் உரையாற்ற இருக்கிறார். உடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரும் தொடக்க விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான முனைவர் செல்வராஜன் “வருமானம் கொடுக்கும் வாழை ரகங்களும்; நவீன சாகுபடி முறைகளும்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். வாழை விவசாயத்தில் அதிக மகசூல் பெற தேர்ந்தெடுக்க வேண்டிய ரகங்கள் பற்றியும், வாழை சாகுபடி தொழில்நுட்ப முறைகளைப் பற்றியும் பேச இருக்கிறார். இதோடு வாழையில் சிப்ஸ், தொக்கு, ஊறுகாய், தின்பண்டங்கள் தயாரிப்பது குறித்தான மதிப்புக்கூட்டல் பற்றியும் பேச இருக்கிறார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் காடுகள் துறையின் பேராசிரியர் முனைவர் பார்த்திபன் “மரம் வளர்த்தால் பணம் விளையும் லாபம் கொடுக்கும் மரங்கள்” என்ற தலைப்பு தொழில்நுட்ப உரை ஆற்ற இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகம் அறியபடாத மர வகைகளான டிவி டிவி, இந்தியன் ஆல்மவுண்ட், வெள்வேல் உள்ளிட்ட மர வகைகளைப் பற்றி பேச இருக்கிறார். தடிமரங்கள், பிளைவுட்டுக்கான மர வகைகளை சாகுபடி செய்வது குறித்தும் பேச இருக்கிறார்.
அமெரிக்காவிலிருந்து நேரலையில் வேளாண் விஞ்ஞானி முனைவர் உதயகுமார் “லாபம் கொடுக்கும் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் பேசுகிறார். ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார். ஜப்பானின் இ.எம் தொடங்கி தென்கொரியாவின் எஃப்.எஃப்.ஜே திரவம் வரை பேச இருக்கிறார். இந்த இடுபொருள்கள் அதிக விளைச்சலுக்கு வழிவகுப்பதால் இவருடைய தொழில்நுட்ப பயனுள்ளதாக இருக்கும்.

திருச்சி மாவட்டம் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகம் வேளாண் கல்லூரியின் முதல்வர் முனைவர் சோழன் “விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களும் அதை பயன்படுத்தும் முறைகளும் “குறித்து பேசுகிறார். நாள்தோறும் ஏ.ஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் வந்து கொண்டே இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார்.
இரண்டாம் நாள்
மார்ச் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்திக் கல்வி மையத்தின் இயக்குனரான முனைவர் மீனாட்சி சுந்தரம் “மாடு, ஆடு, கோழி, பன்றி, முயல் பண்ணை… கால்நடை வளர்ப்பில் காசு பார்க்கும் வழிகள்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். ஆட்டுப் பண்ணை, வெண்பன்றி பண்ணை, முயல் பண்ணையை அமைப்பது எப்படி, குட்டிகள், பன்றிகள் எங்கு கிடைக்கும், கால்நடை பல்கலைக்கழகம் அதற்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். குறைந்த முதலீட்டில் கால்நடை பண்ணை அமைத்து லாபம் ஈட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.

பெங்களூரு மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் சுந்தரேசன் “லாபம் கொடுக்கும் நறுமண தாவரங்கள் மற்றும் மூலிகை சாகுபடி” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். ரோஜாக்களிலிருந்து ரோஸ் வாட்டர் தயாரிப்பது, வெட்டி வேரிலிருந்து எண்ணெய் எடுப்பது, அஸ்வகந்தா சாகுபடி முறைகள், மூலிகை சாகுபடி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் குறித்தும் உரையாற்ற இருக்கிறார். ஊதுபத்தி, மலர் அலங்காரங்கள் செய்வது குறித்தும் தொழில்நுட்ப உரை அளிக்க உள்ளார்.

தென்னை மரங்கள் முதல் மா சாகுபடி வரை என “சிறந்த வேளாண்மைக்கு ஏற்ற இயற்கை இடுப்பொருட்களும் பாசன முறைகளும்” என்ற தலைப்பில் இயற்கை வேளாண் தொழில்நுட்ப வல்லுனரான பிரிட்டோராஜ் உரையாற்ற இருக்கிறார். எந்தெந்த பயிருக்கு எப்படி பாசனம் செய்ய வேண்டும், இயற்கை இடுபொருள்களை எப்படி கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும், நோய்க்கு ஏற்றவாறு இயற்கை இடுபொருள்களை எப்படி கொடுப்பது என்பது குறித்தும் உரையாற்ற இருக்கிறார்.
“காய்கறிகள், முருங்கை, கால்நடை வளர்ப்பு, லாபகரமான இயற்கை விவசாயப் பண்ணை” என்ற தலைப்பில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியான மனோகரன் தன்னுடைய வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். விதை உற்பத்தி செய்து வருமானம் ஈட்டுவது, மரம் வளர்ப்பு, பழச்சாகுபடி, காய்கறி சாகுபடி என்று தன்னுடைய பண்ணையில் மேற்கொண்டு வரும் இயற்கை விவசாயம் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் ஈட்டுவது குறித்தான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
மூன்றாம் நாள்
மார்ச் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வில் “சந்தைக்கேற்ற தோட்டக்கலை பயிர்களும் அதன் விற்பனை முறைகளும்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார் தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் (EDII) முதன்மை செயல் அதிகாரி வசந்தன் செல்வம். எந்தெந்த தோட்டக்கலை பயிர்களுக்கு சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது, அதை மதிப்புக்கூட்டுவது, எங்கு விற்பனை செய்வது என்பது குறித்து பேசுகிறார். முருங்கை, சப்போட்டா, மா, புளி உள்ளிட்ட பல பயிர்கள் பற்றி பேச இருக்கிறார்.

செலவை குறைக்கும் அசோலா மற்றும் சாண எரிவாயு உற்பத்தி” என்னும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முனைவர் கமலேசன் பிள்ளை. வயல்களுக்கு அசோலாவை எப்படி பயன்படுத்துவது, ஆடு, மாடுகளுக்கு வளர்த்துக் கொடுத்து செலவை எப்படி குறைக்கலாம் என்பது குறித்து பேசுகிறார். சாணத்தைப் பயன்படுத்தி உயிர் எரிவாயு என்றழைக்கப்படும் பயோ காஸ் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பேச இருக்கிறார்.
ஊசி, மாத்திரைகள் இல்லாமலேயே கால்நடைகளுக்கு வரும் நோய்களை தடுப்பது குறித்து உரையாற்ற இருக்கிறார் தஞ்சாவூர், மரபுசார் கால்நடை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவரான முனைவர் புண்ணியமூர்த்தி. இவர் “ஆடு, மாடு, கோழி… மூலிகை கால்நடை மருந்துகளை தயார் செய்யும் முறைகளும் அதை பயன்படுத்தும் வழிமுறைகளும்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

சவுக்கு சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதோடு, அதில் கிடைக்கும் சருகுகளையும் பணமாக மாற்றும் வழிமுறைகள் குறித்து உரையாற்ற இருக்கிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான ‘சவுக்கு’ சங்கர். சவுக்கு மர கழிவுகளை தூளாக்க இவர் கண்டுபிடித்த இயந்திரம் குறித்தும் உரையாற்ற இருக்கிறார். “பணமாக மாறும் சருகுகள், சவுக்கு சாகுபடியில் ‘செம’ லாபம்” என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.
இந்த கண்காட்சிக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகில், நடந்து செல்லும் தொலைவிலேயே கலையரங்கம் அமைந்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் பாசன கருவிகள், பம்ப் செட்கள், விதைகள், வங்கிகள், மதிப்புக் கூட்டிய பொருள்கள் அடங்கிய அரங்குகள் இடம்பெற உள்ளன. நாற்றுப் பண்ணைகள், டிராக்டர்கள், களை எடுக்கும் கருவிகள், டிரோன் உள்ளிட்ட பலவிதமான அரங்குகளும் இடம்பெற உள்ளன. வேளாண் ஆலோசனை வழங்கும் அரங்குகளும் இடம்பெற உள்ளன. கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 30 ரூபாய். மாணவர்களுக்கு 15 ரூபாய்.
பல பயனுள்ள விஷயங்கள் இடம்பெறக் கூடிய இந்தப் பசுமை அக்ரி எக்ஸ்போவுக்கு விவசாய பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.