பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து 1,663 கிராம் எடை உள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தப் பயணியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோல், துபாயிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர் உடைமையில் 9 தங்க ராடுகளை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க ராடுகளின் மொத்த எடை 549 கிராம் எனவும் இதன் மதிப்பு ரூ.47,97,162 எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட்டுகள், வெளிநாட்டு ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் என்று கடத்திவரப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.