கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “பெரியார் கருத்துகளை இன்றைய தலைமுறையினருக்கு பரப்பும் வகையில் விரைவில் கோவையில் ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பாஜகவினர் கோவை ஏதோ அவர்களுக்கு சொந்தம் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்கள். அது உண்மை இல்லை. கோவை பெரியார் மண், திராவிட மண் என்பதை கோவை மாவட்ட மக்கள் நிரூபித்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றி பெற்று விட்டதால், இங்கு தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். அதே சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு.. வெளியூரில் நாடாளுமன்ற நேரத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் இங்கு வந்தார்.

இந்த ஊரும் பெரியார் மண் தான்.. அவர்களுக்கு தமிழகத்தில் எங்கேயும் வேலை இல்லை என்பதை உணர்த்தி அனுப்பியுள்ளோம்.
தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டும்..செருப்பு போட மாட்டேன் என்றும் புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்ப சொல்கிறேன். இது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தளபதி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

எனவே வாழ்நாள் முழுக்க செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபதத்தை எடுக்கவேண்டும். அவர் இங்கு மாநில தலைவர் பதவியோடு இருப்பதுதான் நல்லது.” என்றார்.