கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அரசுத் துறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை மூலம், நம் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே கருத்தோடு கல்வி பயில வேண்டும், என்று மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறார். ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் வசதி வாய்ந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது வரை இரண்டு மொழி மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இது கட்டாயமும் அல்ல. திமுக பொது மக்களைத் திசை திருப்புகிறது. இந்தி நிச்சயமாகக் கட்டாயம் அல்ல. இங்கு இந்தி திணிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்களும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இது உண்மையல்ல. தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்று வருகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பாஜகவின் நிலைப்பாடு.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘எந்த ஒரு வரையறையும் இல்லை. தென்னிந்தியா முழுவதும் மாநில எம்பிக்களின் எண்ணிக்கை குறையாது.’ என்று உறுதியளித்துள்ளார்.
இதன் பிறகும் கூட முதலமைச்சர் எந்த ஆதாரமும் இல்லாமல் பூச்சாண்டி காட்ட முயற்சி செய்கிறார். நீங்கள் என்ன தான் கூக்குரல் இட்டாலும் உண்மை ஒருபோதும் மறையாது. பாஜக அத்தனை விஷயங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்.” என்றார்.