‘StartUp’ சாகசம் 13 : ஸ்டார்ட்அப்-களுக்கு முதலீடு; உதவும் சேலம் `ஸ்டார்ட் இன்சைட்ஸ்’ வளர்ந்த கதை

இந்தியாவின் போட்டி நிறைந்த சந்தையில் புதுமையான வணிகங்களின் வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக முதலீட்டாளர்களின் நிதியுதவி முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் பல தொழில்முறை நிதி திரட்டும் நிறுவனங்கள், அவர்கள் வளர்ச்சிக்கு பெரிய காரணியாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தாங்கள் வாக்குறுதியளிக்கும் ஸ்டார்ட்அப்களை சரியான முதலீட்டாளர்களுடன் இணைக்கும் முக்கிய இடைமுகமாகவும் செயல்படுகிறார்கள்.

ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப்

இந்தியாவில் முதலீடுகளை பெற்றுத்தரும் நிறுவனங்கள் பல முக்கிய காரணிகளை உருவாக்கிக் கொடுத்தாலும் கீழ்கண்ட முக்கியமான பணிகளை செய்து தருகின்றனர்…

1. முதலீட்டு யுக்தி உருவாக்கம்

2. பொருத்தமான முதலீட்டாளர் தேர்வு

3. பிட்ச் டெக் தயாரிப்பு

4. நிறுவன மதிப்பீடு வழிகாட்டுதல்

5. விரிவான சந்தை ஆய்வு

இதனால் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.

பொதுவாக முதலீடு கீழ்கண்ட நிலைகளில் இருக்கிறது…

* ப்ரீ-சீட்/சீட்: குடும்பம், நண்பர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள் (ரூ. 10 லட்சம் – ரூ. 3 கோடி)

* சீரிஸ் A ஆரம்ப கட்ட VC-க்கள், பெரிய ஏஞ்சல் சிண்டிகேட்கள் (ரூ. 3 கோடி – ரூ. 15 கோடி)

* சீரிஸ் B மற்றும் அதற்கு மேல்: நிறுவப்பட்ட VC-க்கள், கார்ப்பரேட் வெஞ்சர் ஆர்ம்ஸ் (ரூ. 15 கோடி+)

* மாற்று நிதியுதவி: வருவாய் அடிப்படையிலான நிதியுதவி, வெஞ்சர் கடன், கிரவுட்ஃபண்டிங்

இந்திய ஸ்டார்ட்அப் நிதியுதவியில் தற்போதைய போக்குகள்…

* வெறும் அதிக வளர்ச்சியை விட லாபத்தன்மை மீது அதிக கவனம்

* டயர்-2 மற்றும் டயர்-3 நகர ஸ்டார்ட்அப்களில் அதிக முதலீடு

* துறை சார்ந்த முதலீட்டு முறைகள் (ஃபின்டெக், ஹெல்த்டெக், எட்டெக் முன்னணியில்)

* ஆரம்ப கட்ட முதலீடுகளில் கவனம் செலுத்தும் மைக்ரோ VC-க்களின் எழுச்சி

* சர்வதேச VC-க்களுடன் வளர்ந்து வரும் உள்நாட்டு முதலீட்டாளர் பங்களிப்பு

ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப்

முதலீட்டாளர்களின் நிதி உதவியில் சிறிய நிறுவனமாக இருந்து இந்தியாவில் நட்சத்திர நிறுவனமாக மாறிய நிறுவவனங்களில் ஜீரோதா முக்கியமானது. 2010-ல் குறைந்தபட்சம் 15 லட்சத்துடன் ஆரம்பித்தது இன்று சுமார் 2 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரேசர்பே

2014-ல் சிறிய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் ஆக ஆரம்பித்த ரேசர்பே 2020-ல் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் யூனிகார்ன் நிலையை அடைந்தது, தற்போதைய மதிப்பீடு 7 பில்லியன் டாலருக்கும் அதிகம். இப்படி எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே போகலாம். பெரும் நிறுவனங்களுக்குத்தான் இவர்கள் முதலீடு தருவார்களா என்றால் இல்லை. சேலம் போன்ற நகரங்களில் இருந்தும் முதலீடுகள் பெற்றுத்தர சிறிய ஸ்டார்ட்அப்கள் உள்ளன. அதில் ஸ்டார்ட் இன்சைட்ஸ் நிறுவனமும் ஒன்று.

ஸ்டார்ட் இன்சைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரேமானந்துடன் உரையாடல்…

“சேலத்தில் இருந்துகொண்டு எப்படி முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டு நிறுவனம் ஆரம்பித்திர்கள்? பின்னணியில் ஏதேனும் சுவாரசிய செய்தி உள்ளதா?”

“சேலத்தைச் சேர்ந்த நான், படித்து முடித்தவுடன் பெங்களூரில் நாஸ்காம் அமைப்பின் உதவியுடன் செயல்படும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றினேன். ஆரம்பத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றியதால் ஒரு ஆரம்பகட்ட நிறுவனம் எப்படி செயல்படும் என்பது ஒரளவுக்கு புரிந்தது. அதன்பின் பெங்களூரிலேயே ஃபின்டெக் நிறுவனம் தொடங்கினோம். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த சமயம் என்பதால் ஜிஎஸ்டி தொடர்பான டெக்னாலஜி நிறுவனமாக செயல்பட்டது. கிட்டத்தட்ட விர்ச்சுவல் சி.எப்.ஓ போல செயல்படும் நிறுவனம் அது. ஆறு மாதங்கள் வரை செயல்பட்டிருப்போம். ஆனால், அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நேரம் சரியானதல்ல. இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் அதற்குத் தயராகவில்லை.

ஸ்டார் இன்சைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரேமானந்த்

அதனால் அந்த ஸ்டார்ட்-அப் முயற்சி தோல்வி அடைந்தது. பின் மனம் துவளாமல் இரண்டாவதாக ஒரு எஜுடெக் நிறுவனம் தொடங்கினோம். கல்லூரி மாணவர்கள் தேவையானதைப் படிக்காமல், கிடைத்ததை படிக்கும் நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களின் திறனை அறியும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையானதைப் படிக்க உதவிட முடியும். தவிர மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் நடத்தினோம். அதனால் இந்த ஸ்டார்ட் அப் நன்றாக இருந்தது. ஆனாலும், என்னுடைய இணை நிறுவனர் உயர் படிப்புக்காக சென்றுவிட்டதால், இணை நிறுவனர் இல்லாமல் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்த முடியவில்லை. அந்த நிறுவனமும் தோல்வி என்பதால் பெங்களூருவிலிருந்து சேலம் வந்துவிட்டேன்.

சேலம் போன்ற நகரங்களில் தொழில்முனைவு என்பது மிகவும் குறைவு. அதனால் இங்கே தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என ’ஸ்டார்டர்ஸ்அப்’ என்னும் நிறுவனம் ஆரம்பித்தேன் இங்கும் நிலைமை தலைகீழ். இங்கு தொழில்முனைவுக்கான சூழலே இல்லை என்பதால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக ’Trapsi’ என்னும் நிறுவனம் தொடங்கினோம். இந்த சமயத்தில்தான் கோவிட் வந்தது. கல்லூரிகள் மூடப்பட்டதால் இதுவரை உருவாக்கிய அனைத்தும் வீண் ஆனது. நிறைய தோல்வி்களால் துவண்டுவிட்டோம். ஒரு கட்டத்தில் அடுத்து என்ன என்று முடிவெடுக்கவே தயக்கமாக இருந்தது. ஆனால், எங்களிடம் படித்த சில மாணவர்களுக்கு டிசைன் தெரியும் என்பதால் நிறுவனங்களுக்கு இணையதளம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என பல விஷயங்களையும் சேவையாக கொடுக்கத் தொடங்கினோம்.

ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப்

அப்போது அவர்களிடம் பேசிய போதுதான் தெரிந்தது, அவர்களுடைய பிரச்னை நிறுவனத்தை நடத்துவதை விட நிதி திரட்டுவதிலும், திரட்டிய நிதியை அடுத்து எப்படி முதலீடு செய்து நிறுவனத்தை விரிவாக்குவது என்ற ஐடியாவும் இல்லை என்று. அப்போதுதான் “ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்படி நிதி திரட்டுவது, எப்படி முதலீட்டாளர்களுடன் உரையாடுவது. எப்படி அதற்குத் தேவையான பிட்ச் டெக் தயார் செய்வது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து என் சமூக வலைத்தளங்களில், பிரேம் இன்சைட் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். அந்த பிரேம் இன்சைட்தான் தற்போது Start Insights ஆக மாறி இருக்கிறது”.

“உங்கள் நிறுவனம் என்னதான் செய்கிறது? உங்கள் சேவையால் என்ன மாதிரியான மாற்றங்கள் இங்கே நிகழ்கிறது?”

“இந்தியாவில் நிறைய பேருக்கு திறமைகள் இருந்தாலும், அவர்கள் மேலும் விரிவாக்க முதலீடு அவசியமாகிறது. முதலீடு கிடைத்தாலும் அதை எப்படி எங்கே முதலீடு செய்வது என்பதும் சில நேரங்களில் அவசியமாகிறது. திடீரென அவர்கள் நிறுவனத்தின் துணை நிறுவனர் வெளியேறிவிட்டால் அவர்கள் தடுமாறுகிறார்கள். நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவைகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் தீர்வாக ஒரே இடத்தில் மேற்கண்ட அனைத்து சேவைகளையும் வழங்குகின்றோம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் மிக அதிகமான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் அந்த வாய்ப்புகளை சேலத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் பெறவும், அவர்கள் இந்திய அளவில் விரிவாக்கம் செய்யவும் நாங்கள் உதவுகிறோம்”.

ஸ்டார் இன்சைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரேமானந்த்
ஸ்டார் இன்சைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரேமானந்த்

“உங்கள் சேவையால் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? இதில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?”

“300 நிறுவனங்களுக்கு மேல் இதுவரை நாங்கள் பணியாற்றி அவர்களை, அடுத்த முதலீட்டாளர்கள் முதலீடு பெறும் நிலைக்கு மாற்றியுள்ளோம். இந்த நிலையை அடைவது சாதாரணப் பணியில்லை. மேலே குறிப்பிட்ட, முதலீட்டு யுக்தி உருவாக்கம், பொருத்தமான முதலீட்டாளர் தேர்வு, பிட்ச் டெக் தயாரிப்பு, நிறுவன மதிப்பீட்டு வழிகாட்டுதல், விரிவான சந்தை ஆய்வு ஆகியவற்றை நாங்கள் செய்து தருகின்றோம். பல நிறுவனங்கள் இவற்றில் சிலவற்றை மட்டும்தான் தயார் செய்வார்கள். மற்றவற்றை நாங்கள் தயார் செய்துக்கொடுக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஸ்டார்ட்அப் பள்ளி போல் செயல்பட்டு நிறுவனங்களை தயார் செய்கின்றோம். எங்களால் பலனடைந்தவர்கள் பலர் உள்ளனர். குறிப்பிடத்தக்கதாக குக்கர் நிறுவனம். மைக்ரோசாப்ட் அமெரிக்காவில் பணியாற்றியவர்கள், கொரோனா நேரத்தில் சரியான உணவு கிடைக்கவில்லை என்று பலரும் பேசியதைப்பார்த்து வீட்டு சாப்பாடுக்கு என்றே தனி விநியோக உணவு நிறுவனத்தை துவங்கினர். அவர்களுக்குப் பணியாற்றினோம்.

டாக்மோட்ஸ் எனும் மருத்துவர்களுக்கான மென்பொருளை ராசிபுரத்தில் உள்ள யா கிரியேசன் எனும் நிறுவனம் உருவாக்கியிருந்தது. அவர்களுக்காக ஒரு பிட்ச் டெக் தயார் செய்து முதலீட்டாளர்களுடன் பேசிவருகின்றோம். வேளாண்மார்ட் எனும் நிறுவனத்திற்கும் நாங்கள் பணியாற்றியிருக்கின்றோம். இப்படி 300 நிறுவனங்களுக்குப் பணியாற்றியிருக்கின்றோம். நாங்கள் ரூ. 100 கோடிக்கு முதலீடு பெற்றுத் தந்திருக்கின்றோம். சவால்கள் என்று பார்த்தால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், அவர்களுக்கு இன்னமும் முதலீட்டாளர்களை எப்படி அணுகுவது? எப்படி பிட்ச் டெக் தயார் செய்வது என்பதை இன்னமும் உணரவில்லை, அப்படியே இருந்தாலும் நாங்கள் இன்னமும் விரிவாக விளக்கி அவர்களை தயார் செய்கின்றோம்”.

ஸ்டார் இன்சைட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரேமானந்த்

உங்கள் இலக்கு என்ன?

“எங்கள் இலக்கு எங்களிடம் முதலீட்டுக்கு வரும் நிறுவனங்களை 60 நாள்களில் முதலீட்டுக்கு தயார் செய்கின்றோம். அதை இன்னமும் குறைவான நாள்களுக்குள் அவர்களை முதலீட்டுக்கு தயார் செய்ய எங்கள் பணிகளை துரிதப்படுத்துகின்றோம். பணத்தால் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பாக 2, 3-ம் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்களை எல்லா வகையிலும் நாங்கள் தயார் செய்கின்றோம். இன்னும் சில வருடங்களில் சேலம், நாமக்கல், ஈரோடு நகரங்களில் இருந்தும் யுனிகார்ன் நிறுவனங்கள் வரும், அதற்கு நாங்கள் துணை நிற்கின்றோம்”.

(ஸ்டார்ட்அப்கள் வரும்..!)