கோவையில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறு குறு நிறுவனங்களில் இதயம் என்று தொழில் நகரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான கல்வி நிறுவனங்களின் மூலம் சிறந்த கல்வி கட்டமைப்பையும் கொண்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட உயர் கல்விக்காக கோவை வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக கோவை கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி 17-வயது சிறுமி ஒருவர் கல்லூரி மாணவர்கள் ஏழு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சமூகவலைதள நண்பனை நேரில் பார்க்க குனியமுத்தூரில் உள்ள அவன் வீட்டிற்குச் சென்ற சிறுமியை அவனும், அவன் அறை நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

செல்போனில் ஆபாச வீடியோ
கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல.. பள்ளி மாணவர்களின் நிலை கூடுதல் வேதனையை தருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அங்கு பள்ளி படித்து வரும் 4 மாணவர்களும் , 18 வயது இளைஞன் ஒருவனும் அதே ஊரைச் சேர்ந்த 2 சிறுவர், சிறுமிகளை தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளனர். குழந்தைகள் உதவி மையம் மூலம் புகாரளிக்கப்பட்டு, 4 சிறுவர்கள் ஒரு இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேரை போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது கைது செய்யப்பட்ட சிறுவர்கள் செல்போனில் ஆபாச வீடியோ அதிகம் பார்த்தது தெரியவந்தது.
போலீஸார் அதிரடி சோதனை
மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவதற்கு போதை பழக்க வழக்கம் தான் காரணம் என்ற புகார் பரவலாக உள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து புதிய புதிய போதை பொருள்களை கோவைக்கு கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகளில் குனியமுத்தூர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் மாடியில் மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து வந்ததைப் போலீஸார் கண்டுபிடித்தனர். இதில் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை கஞ்சா செடி வளர்த்து வந்ததற்காக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த 22 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு, வழிப்பறி
மாணவர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி பாலியல், திருட்டு, வழிப்பறி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். கோவை சரவணம்பட்டி அருகே, கோவில்பாளையம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வீடு ஒன்றில் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், நான்கு மொபைல் போன்கள், இரண்டு லேப்டாப்களை திருடிச் சென்றனர். வேறொரு வழக்கில் போலீஸார் 10 மாணவர்களிடம் விசாரணை நடத்திய போது அதில் மூன்று மாணவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதிலும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பிடிபட்டுள்ள நிலையில் மீதம் உள்ள மூன்று மாணவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப் மற்றும் ஐ போன் உள்ளிட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கல்லூரிகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அந்தப் பகுதிகளில் தங்கியுள்ள வீடுகளில் 80-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
“காவல்துறை, கல்லூரி நிறுவனங்கள், பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கொடுக்க முடியும்..” என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
