குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சென்னை தலைமை செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்தி முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி மற்றும் அவருடன் சிலர் சென்னை செல்வதற்காக தயாராக இருந்தனர். இதனையறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸார் நேற்று மதியம் முதல் பாப்பாத்தியை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக கட்சியினரை அழைத்துக் கொண்டு, சாணார்பட்டி மேட்டுக்கடை பகுதியில் உள்ள பாப்பாத்தியின் இல்லத்திற்கு எம்.பி சச்சிதானந்தம் சென்றார். வீட்டிற்குள் சென்று சிறிதுநேரம் பேசியவர், பாப்பாத்தியை அங்கிருந்து தனது காரில் அழைத்துச் செல்ல முயன்றார்.

இதை பெண் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். தங்களின் உயர் அதிகாரிகள் பாப்பாத்தியை வீட்டுக்காவலில் வைத்திருக்க உத்தரவிட்டிருப்பதாகவும், அவரை வெளியே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறினர். இதனால் போலீஸாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே எம்.பி., காவல் உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் பாப்பாத்தியை அழைத்துச் செல்வதை தடுக்க கூடாது எனவும் வாக்குவாதம் செய்தார். அங்கிருந்த போலீஸார் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து, பெண் போலீஸாரை தள்ளிவிட்டுச் சென்றதாகக் குற்றச்சாட்டினர். மேலும் கட்சி நிர்வாகி ஒருவர் தலைமைக்காவலர் ஒருவரை தள்ளிவிட்டபடி தாக்க முயன்றார். பிறகு அங்கிருந்து பாப்பாத்தி காரில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “சம்பந்தப்பட்ட அமைப்பினர் சென்னையில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை. ஆனால் அந்த போராட்டத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து பாப்பாத்தி தலைமையிலான அமைப்பினர் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் தான், பாப்பாத்தி வீட்டிற்கு காவல் வைத்தோம். அந்த அமைப்பினருக்கு போராட்டம் நடத்த வேறு இடம் ஒதுக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதும், பாப்பாத்தி வீட்டில், போலீஸார் காவலில் இருந்து விலகிக்கொள்ளப்பட இருந்தனர். இந்த உத்தரவு முறையாகச் செல்வதற்கு முன் எம்.பி., சென்றதால் பரபரப்பாகியது. மற்றபடி எந்த மோதலும் நடக்கவில்லை” என்றனர்.