உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை 45 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில், 66 கோடி பேர் கலந்து கொண்டனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தனை மக்களின் முக்கியப் போக்குவரத்தாக இருந்தது இந்திய ரயில்வே. எனவே, இந்த நிகழ்வுக்காக ஒருங்கிணைப்புடன் செயல்பட்ட ரயில்வேதுறை ஊழியர்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டியிருக்கிறார்.

இன்று பிரயாக்ராஜுக்கு வந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பிரதமர் மோடியின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கும், ஏராளமான யாத்ரீகர்களைக் கையாள்வதற்கு ஒத்துழைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கும் நன்றி. பயணிகளுக்கு பாதுகாப்பான, ஆரோக்யமான, வசதியான பயணத்தை எளிதாக்குவதற்கு உழைத்த இந்திய ரயில்வே ஊழியர்களுக்கும் நன்றி. பாதுகாப்பை உறுதிசெய்த பயணிகளுக்கு உதவும் முன்னணி ஊழியர்கள் முதல் ஆர்.பி.எஃப், ஜி.ஆர்.பி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையினர் வரை அனைவருக்கும் நன்றி.
இந்திய ரயில்வே கும்பமேளாவுக்காக மொத்தம் 17,152 ரயில்கள் இயக்கியது. இதில் 7,667 சிறப்பு ரயில்களும் அடங்கும். இதனால் பக்தர்கள் சீராகவும் அமைதியாகவும் பயணிக்க முடிந்தது. பிரயாக்ராஜின் ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் 4.24 கோடி பயணிகள் வந்துசென்றிருக்கின்றனர். அவர்களுக்காக இந்திய ரயில்வே பிரயாக்ராஜில் உள்ள ஒன்பது முக்கிய நிலையங்களில் விரிவான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை செயல்படுத்தியது” என்றார்.