செவிலியர் மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான பெரம்பலூர் காவலர் பணியிடை நீக்கம்!

பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் பிருத்திகைவாசன். இவர் கடந்த ஆண்டு ஒரு குற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 4 நாள்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சேர்த்தனர். அப்போது, இவருக்கு பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராகப் பணியாற்றி வரும் இளம்ராஜா (வயது: 36) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில், கைதி வார்டுக்கு முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர் அந்தக் கைதிக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளார். அப்போது, காவலர் இளம்ராஜா அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

திருச்சி

அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில் இளம்ராஜா, மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளம்ராஜாவைக் கைதுசெய்தனர். அதோடு, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, போக்சோ சட்டத்தில் கைதான இளம்ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். செவிலியர் மாணவிக்கு காவலர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.