திருத்துறைப்பூண்டி: இடிந்து விழும் நிலையில் மருத்துவமனை குடிநீர்த் தொட்டி… அலட்சியம் வேண்டாமே!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள கோட்டூர், முத்துப்பேட்டை, திருக்குவளை மற்றும் வேதாரண்யம் தாலுகா கிராம மக்கள் இம்மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நூறு உள் நோயாளிகளும் தினசரி ஆயிரம் பொது நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக உள்ள மருத்துவமனையின் குடிநீர் தேக்கத் தொட்டி சேதம் அடைந்து உள்ளதாக நோயாளிகளும் பொதுமக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், “திருத்துறைப்பூண்டியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே இடமாக இந்த அரசு மருத்துவமனை உள்ளது. ஏழை எளியோர்கள், விவசாயக்கூலித் தொழிலாளிகள் முதலானோர் மருத்துவச் சிகிச்சையைப் பெற இந்த அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இத்தகைய சூழலில் மருத்துவமனையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் எதிர் வருவது கோடைக் காலம் என்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகமும் அரசு மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து பழைய நீர்த்தேக்கத் தொட்டியினை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியைக் கட்டித்தர முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரம் தொடர்பாக மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

இது குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரான துர்காவை மூன்று முறை தொடர்பு கொண்டோம். அவர் இது சார்ந்து எந்த ஒரு தகவலும் தராமல் அலைக்கழித்தார்!

சேதமடைந்த குடிநீர்த் தொட்டியினால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை கவனத்தில் கொண்டு இடித்துவிட்டு, புதிய குடிநீர்த் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என்பதே அரசியல் கட்சியினர், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது!