GST கட்டியதாக போலி ஆவணம் தயாரித்து ரூ.6.50 லட்சம் மோசடி! – பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (வயது: 43). இவர், பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021 – ம் ஆண்டு வரை சுமதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6,56,043 பணம் கணக்காளர் ரவிக்கு மொத்த விற்பனை மருந்து கடைக்கு ஜி.எஸ்.டி. வரி கட்டுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

GST – ஜி.எஸ்.டி

இந்நிலையில், திருச்சி இப்ராஹிம் பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாரத்குமார், பிங்கி தேவி மற்றும் ரவி ஆகியோர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து ஜி.எஸ்.டி வரி கட்டியதாக சுமதி மற்றும் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் ஏமாற்றி சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, சுமதி திருச்சி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நீதிமன்றம், மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதோடு, சுமதியை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.