“திமுக-வினருக்கு இந்தி எது, இங்கிலீஷ் எதுவென்றே தெரியவில்லை’’ – கலாய்த்த சீமான்

வேலூரில் இன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சீமான் பேசுகையில், “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாதக பங்கேற்காது. இந்த விவகாரத்தில் நாங்கள் தனித்து போராடுவோம். இந்தக் கட்சிகள், இந்த ஆட்சிகளின் கருத்துகளை நான் எப்போதுமே நம்புவதில்லை. இவர்களை நீண்ட காலமாக நம்பி ஏமாந்த இனக் கூட்டம் நாங்கள். இப்போது தான் இந்தக் கருத்தையே இவர்கள் பேசுகின்றனர். நான் 2003-ம் ஆண்டே அறிக்கை விட்டு, இந்தக் கருத்துக்கெதிராக பேசியிருக்கிறேன். இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் தி.மு.க தொடர்ச்சியாக வஞ்சகம் செய்யும்; நாடகம் போடும். தேர்தல் வருவதால் இன்றைக்கு பேசுகின்றனர்.

சீமான்

இந்தி எல்லா இடங்களிலும் திணிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியாதா… நீங்களே இந்தியில் பேசி வாக்கு கேட்கவில்லையா? எத்தனை முறை மேலே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போதெல்லாம், கட்டாய இந்தி திணிப்பு தடுக்க ஏதாவது வேலை செய்தீர்களா… எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதற்காக ஏதாவது போராடினீர்களா? ஒன்றுமே இல்லையே. இன்றைக்குத்தான் இந்தி திணிக்கப்படுகிறதா… இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் நீங்கள் கூட வைத்திருக்கின்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? எத்தனை காலத்துக்கு இந்த நாடகத்தை எங்களை நம்பச் சொல்கிறீர்கள்.

நேற்று கட்சி ஆரம்பித்து இன்று ஆட்சிக்கு வந்தீர்களா? 60 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தொடர்கிறது. என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

நீங்கள் நடத்துகிற பள்ளிக்கூடங்களில் பாடமொழியாக இந்தி இருக்கிறதா, இல்லையா… அங்கு தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறதா, இல்லையா… உங்கள் கொள்கை முடிவு என்ன? நீட், ஜி.எஸ்.டி என எல்லாமே கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சி. கூட இருந்தது தி.மு.க. நீங்கள் பெத்து பெயர் வைக்கிறீர்கள். பா.ஜ.க ஊட்டமாக உணவுக் கொடுத்து வளர்க்கிறது. ஒரே கோட்பாடு தான். அவர்கள் அவர்கள் மொழியை எங்கள் மீது திணிக்கப் போராடுகிறார்கள். நாங்கள் அதை தடுத்து எங்கள் மொழியை மீட்க, காக்க போராடுகிறோம்.

இது தவிர்க்க முடியாத போர். பிரசாந்த் கிஷோரை நான் பாராட்டுகிறேன். அவர் மொழியை `கெட்-அவுட்’ சொல்ல அவர் தயாராக இல்லை. போர் நடத்தி ஒரு நாட்டை அழித்துவிட்டால்கூட மொழியை வைத்துகொண்டு ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர் இருந்தாலும் அந்த இனம் உயிர் பிழைத்துவிடும். ஆனால், மொழியை அழித்துவிட்டால் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு இருந்தாலும் அந்த நிலம் வாழாது.

சீமான்

நான் வட இந்தியாவுக்கு வர வேண்டுமானால், இந்தி கற்றுக்கொண்டு வரச் சொல்கிறீர்கள். அவர்கள் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ் கற்றுக்கொண்டு வரமாட்டார்களா? நானும், என் படையும் இருக்கிற வரை `இந்தி படி’, `கிந்தி படி’ என்று பேசிக்கொண்டிருக்கக் கூடாது. தி.மு.க-வினருக்கு இந்தி எது, இங்கிலீஷ் எதுவென்றே தெரியவில்லை. ஏறிப்போய் இந்திக்கு கீழுள்ள இங்கிலீஷை அழித்துவிட்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய கட்சியிலிருந்து சிலர் வெளியேறியது நல்ல முடிவு தான். நான் வரவேற்கிறேன். என்னை சிதைப்பதாக நினைத்து என் கட்சியை செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். `இவன் உனக்கான ஆள் இல்லை. உனக்கு விசுவாசமாக இல்லை’ என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிகிறது. அவன் போனப் பிறகே `ஆஹா, இவ்வளவு நாள்களாக இவனையா நம்பியிருந்தோம்’ என்று எனக்குத் தெரியவருகிறது. எனவே, அவர்கள் வெளியேறியது எனக்கு நல்லது தான். போனவர்கள் யாரும் முக்கிய பிரமுகர்கள் கிடையாது’’ என்றார் சீமான்.