`தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதம் தள்ளி வைக்கவேண்டும்’ – கிருஷ்ணசாமி

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளில் முறைகேடு நடப்பதாக அறநிலையத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, தென்காசி கோயிலில் திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில், திருப்பணி முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணசாமி

இந்தநிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் திடீரென விசிட் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள் இன்னும் 6 மாத காலம் ஆனாலும் முடிவடைய வாய்ப்பு இல்லை. இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் அரைகுறையாக மோசமாக செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பு பணி என்ற பெயரில் கோயிலில் உள்ள மண்டபங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மேல்பூச்சு செய்து, புனரமைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயிலின் பல்வேறு புனரமைப்பு பணிக்காக ரூ.10 கோடிக்கு மேல் பொதுமக்கள் நன்கொடை அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை ரூ.1 கோடி அளவுக்கு கூட புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை. பணிகளில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?. எந்த பணியும் நிலைத்து நிற்கும் வகையில் நடைபெறவில்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அறநிலையத்துறை அமைச்சர் நேரில் தலையிட்டு, அவசரகாலத்தில் பணிகள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும். கும்பாபிஷேக தேதியை, குறைந்தது 6 மாத காலத்துக்கு ஒத்திவைத்து, பணிகளை முழுமையாக மேற்கொண்ட பின்னர் ஆன்மிக மக்களின் முழு திருப்தியோடு பணிகளை முடித்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்.

ஃபைல் படம்

முறைகேடுகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு முன்புள்ள திறந்தவெளி பகுதியில் கேட் அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதுஅவசியமற்றது” என்று பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel