திருப்பூர்: `வாய், மூக்கில் ரத்தம்’ திடீரென உயிரிழந்த குரங்குகள்.. திருமூர்த்திமலையில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்திமலை. பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வனப்பகுதியையொட்டி உள்ளதால், திருமூர்த்திமலையில் அதிக அளவில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், திருமூர்த்திமலையில் கடந்த சில நாள்களாக 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமூர்த்திமலை

இதுகுறித்து திருமூர்த்திமலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலர் நம்மிடம் கூறுகையில், “இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்கள் அல்லது தங்கள் கொண்டுவரும் உணவுகளை குரங்குகளுக்கு அளிப்பது வழக்கம். கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நன்றாக இருந்த குரங்குகள் திடீர் திடீரென மயங்கி பின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறி ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தன. இளம்வயது குரங்குகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. சற்று வயதான குரங்குகளே இறந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் இறந்த குரங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தினர்.” என்றனர்.

இதுதொடர்பாக உடுமலைப்பேட்டை வனச்சரகர் மணிகண்டன் பேசுகையில், “குரங்குகள் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் திருமூர்த்திமலை பகுதியில் கால்நடை மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குரங்குகளைப் பிடித்து அவற்றின் ரத்த மாதிரி, சளி மாதிரி மற்றும் அவற்றின் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை மாதவரத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோர்வாக காணப்படும் குரங்குகளைப் பிடித்து அவற்றுக்கு ஊட்டச்சத்து ஊசி மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாதிரி சேகரிப்பு

திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்களையும், கூல்டிரிங்ஸ்களையும் கொடுக்கின்றனர். அதனால், குரங்குகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வைரஸ் தொற்று ஏதேனும் பரவியுள்ளதா என்று கண்காணித்து வருகிறோம். குரங்குகளை கண்காணிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு மாதிரியின் முடிவுகள் கிடைத்தபின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.