திருடிச் சென்ற பைக்கை திருடிய வீட்டிலேயே விட்டுவிட்டு, கவலையும் மிரட்டலும் கலந்த முறையில் மன்னிப்புக் கடிதமும் எழுதி, பெட்ரோலுக்கு பணத்தையும் வைத்துவிட்டுச் சென்ற நபரின் செயல் சிவகங்கை பகுதியில், பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சில நாள்களுக்கு முன்பு ஒருவருடைய பைக் திருடு போயுள்ளது. அது குறித்து அவர் திருப்புவனம் போலீஸில் புகார் கொடுக்க… போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அவர் வீட்டருகே காணாமல் போன பைக் நிறுத்தப்பட்டிருக்க, ஆச்சர்யப்பட்ட உரிமையாளர் பைக் அருகே சென்று பார்த்தபோது பைக்கில் எழுதி ஒட்டப்பட்டிருந்த கடிதம் இன்ப அதிர்ச்சியை அளித்தது.
அந்தக் கடிதத்தில்,
அனுப்புநர் : பிளாக் பாண்டா…
பெறுநர் : வண்டியின் உரிமையாளர்..
என்று எமோஜி சிம்பளெல்லாம் வரைந்து, அதன் கீழ் பொருள் என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட கடிதத்தில், “அவசரத்துக்கு பைக்கை எடுத்துவிட்டேன். தவறை உணர்ந்து 450 கிலோ மீட்டர் பயணித்துக் கொண்டு வந்துள்ளேன். பெட்ரோல் டேங்கில் 1,500 ரூபாய் பணம் இருக்கிறது. எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருந்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம்” என்று எழுதி, கீழே இப்படிக்கு, பிளாக் பாண்டா என்றும் எழுதியிருந்தது.

ஒருபக்கம் பைக்கை திருடியதற்கு மன்னிப்பு கேட்பதுபோல் இருந்தாலும், கடைசி வரி மிரட்டுவது போல் இருப்பதால் திருப்புவனம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்
Link :- https://bit.ly/VikatanWAChannel