CAG : `மதுபான கொள்கை… அரசுக்கு ரூ.2,000 கோடி இழப்பு’ – ஆம் ஆத்மிக்கு சிஏஜி அறிக்கையால் சிக்கல்?

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கவிழ மிக முக்கிய காரணமான டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை டெல்லியில் ஆட்சி அமைத்த உடனேயே ஆழமாக தோண்ட தொடங்கி இருக்கிறது பாஜக. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தடுத்த நாட்களில் பெரும் நெருக்கடி ஏற்படப்போவது திட்டவட்டமாகியுள்ளது.

கடந்த 2022 அம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது.

பாரதிய ஜனதா கட்சியினர் வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்ய டெல்லி துணை நிலை ஆளுநர் இசைவு தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனை முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 13 பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து இருந்தது.

பிறகு இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையும் சேர்ந்து கொள்ள மனிஷ் சிசோடியா தொடங்கி அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கும இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கிறது எனக்கூறி ஹைதராபாத் சென்று அவரை கைது செய்தது அமலாக்கத்துறை.

கைது நடவடிக்கையின் கிளைமாக்ஸ் ஆக நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

பிறகு அவருக்கு சிறப்பு ஜாமீன் என்பது உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட, தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அடுத்த அடியாக டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி மண்ணைக் கவ்வ, அதற்கு மிக முக்கிய காரணம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் கட்சி என்ற பிம்பத்தை ஆம் ஆத்மி கட்சியின் மீது பாஜக வைத்ததுதான். ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குகிறோம் என சொல்லிவிட்டு இவர்களை ஊழல் செய்கிறார்கள் இவர்களுக்காக உங்கள் வாக்கு என பாஜக கேட்டது டெல்லி மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபட்டது.

கெஜ்ரிவால், மோடி

அந்த சூட்டை குறையாமல் பார்த்துக் கொள்ள புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் டெல்லி அரசின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான சிஏஜி அறிக்கையை சமர்ப்பித்து அனலை கூட்டி இருக்கிறது பாஜக.

டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகவே இந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த பாஜக அரசு அமைந்த உடன் அதை முதல் வேலையாக செய்துள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த 2021 – 2022 நிதியா ஆண்டில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின் காரணமாக அரசுக்கு 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட போகிறது என அறிவிப்பு வந்த உடனேயே சட்டப்பேரவையில் கடுமையான அமலில் ஈடுபட்டனர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள். முதல்வர் அறையில் இருந்து அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என அவர்கள் போராட்டங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி உள்ளிட்ட 20க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து இடைநீக்கம் செய்தார் சபாநாயகர் விஜேந்திர குப்தா.

அரவிந்த் கெஜ்ரிவால்

இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஆதிஷி, டெல்லியில் புதிய மதுபான கொள்கையினால் ஏற்பட்ட இழப்பிற்கு காரணம் துணைநிலை ஆளுநர் மற்றும் சிபிஐ அமலாக்கத்துறை ஆகியவை போட்ட முட்டுக்கட்டை தான் என குற்றம் சாட்டினார். இதே மாதிரியான மதுபான கொள்கையை தான் ஆம் ஆத்மி அரசு நடந்துவரும் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தி இருக்கிறோம். அங்கு 2021 – 2022 நிதியா ஆண்டில் 6,158 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அதிகரிப்பு நடப்பு நிதியாண்டில் 10,146 கோடியாக உயர்ந்திருக்கிறது என புள்ளி விவரங்களுடன் பேசினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் டெல்லி பாஜக அரசு ஆம் ஆத்மிக்கு அடுத்த குடைச்சலை கொடுக்க முழுமையாக தயாராகிவிட்டது என்பதை தான் பார்க்க முடிகின்றது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களை விசாரணை அமைப்புகளிடம் வழங்கி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை முடுக்கி விடவும் அவர்கள் தயாராகி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் இன்னும் நெருக்கடியை அந்த கட்சி இந்த விவகாரத்தில் சந்திக்கப் போகிறது

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel