மத்திய அரசு புதியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“புதியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிப்போம்” எனக் குறிப்பிட்டார்.
இது தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நடிகை ரஞ்சனா நாச்சியார் பா.ஜ.க-விலிருந்து விலகியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நான் பா.ஜ.க-விலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். தேசப்பற்று மிகுந்த கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் கட்சியில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்கிற மாற்றான்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது. மும்மொழிக் கொள்கை திணிப்பு திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு இயங்க முடியவில்லை.” எனக் குறிப்பிட்டு கட்சியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர், “இனி என் பயணம் வெற்றிப் பயணமாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டை வெற்றிக் களமாக மாற்றப்போகிறது என்பது என் நம்பிக்கை. நாளைய இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கப்போகும் கழகம் இது. இந்தக் கட்சியில் இணைந்தால் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதினேன். தமிழ்நாட்டில் தமிழச்சியாக தமிழ்மொழிக்காக நிற்க வேண்டும். அதற்காகதான் இந்தக் கட்சியில் இணைந்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
