Sasi Tharoor: “காங்கிரஸில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா சசி தரூர்?” – பாஜக விமர்சனம்!

காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கேரளா எம்.பி சசி தரூருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் எழுந்துள்ள நிலையில், கட்சி தலைவருக்கான தேர்தலில் சசி தரூர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து போட்டியிட்டதுதான் அவர் ஒதுக்கப்பட காரணம் என விமர்சித்துள்ளது பாஜக.

2022-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கார்கே வெற்றிபெற்று கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத தலைவராக உருவானார்.

பாஜக ரியாக்‌ஷன்!

மல்லிக்கார்ஜுன கார்கேவுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததைக் குறிப்பிட்டு, “காந்தி குடும்பத்தின் வேட்பாளரான மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடத் துணிந்ததால் சசி தரூரை ஒதுக்குவது இன்றியமையாததாகிவிட்டது. அவருக்கு மிகப் பெரிய நற்பெயர் இல்லாவிட்டால் இந்த ஒதுக்குதல் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்திருக்கும்” என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்வீட் செய்துள்ளார்.

சசி தரூர் கேரளா தொழில்துறையில் ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி பற்றி எழுதிய கட்டுரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை புகழ்வதாக காங்கிரஸ் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை சசி தரூர் பாராட்டியதும் காங்கிரஸ் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில், (பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் உடன் செல்ஃபி)

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

இன்று சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில், பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்து, “பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான வெளியுறவுச் செயலர் ஜோனதன் ரெனால்ட்ஸ், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டதில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.

“எனக்கு பிற வேலைகள் இருக்கின்றன…”

சில நாட்களுக்கு முன்னர் மலையாள பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், தான் கட்சிக்கு பணியாற்ற தயாராக இருப்பதாகவும், ஒருவேளை அவரது பங்களிப்பு தேவையில்லை என்றால் வேறு தேர்வுகள் இருப்பதாகவும் பேசியது, அவர் கட்சி மாறுகிறாரா என்ற கேள்வியை பலமாக தூண்டியது.

அவர், “கட்சிக்கு நான் தேவையில்லை என்றால், எனக்கு செய்ய பல வேலைகள் இருக்கின்றன. படிக்க புத்தகங்கள் இருக்கின்றன, நான் உரையாற்ற உலகம் முழுவதுமிருந்து அழைப்புகள் வருகின்றன” எனப் பேசியுள்ளார்.

சசி தரூர்

கட்சி தாவுகிறாரா Sasi Tharoor?

இந்த பேச்சுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இந்த உரையாடல் பிப்ரவரி 18-ம் தேதி சசி தரூர் ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தாமஸ் ஐசக், தரூர் காங்கிரஸில் இருந்து விலகினால், அனாதையாக இருக்கப்போவதில்லை எனப் பேசி மறைமுகமாக சசி தரூருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லாவற்றையும் கடந்து சசி தரூர் காங்கிரஸில் நீடிக்கிறார். அவர் கேரள காங்கிரஸில் இருக்கும் தலைமை வெற்றிடத்தை சுட்டிக்காட்டி மாநில அரசியலில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் கேரளாவில், முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க எண்ணுகிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.