சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2: கமலா ஆரஞ்சு தோல் துவையல் டு இளநீர் புட்டிங்- அசத்திய வடசென்னை பெண்கள்

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் இறுதிக்கட்ட போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 13-வது இடமாக இறுதியாக வடசென்னையில் நடைபெற்றது.

கொளத்தூரிலுள்ள பௌர்ணமி மஹாலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 104 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.

முதற்கட்டமாக போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்து தாங்கள் சமைத்ததை நடுவர் செஃப் தீனாவின் முன் காட்சிப்படுத்தினர்.

கமலா ஆரஞ்சு தோல் துவையல், காராமணி அடை, அப்பத்தா ஸ்பெஷல் பால் லேகியம், ஸ்பைஸ்டு கேரட் கேக், வாழை இலை அல்வா, வெற்றிலை ரசம், நீர் எலுமிச்சங்காய், பனிவரகு தயிர்சாதம், பருத்திப்பால் அல்வா, மூவர்ண இட்லி, இளநீர் புட்டிங், சோள பணியாரம், தேங்காய் போளி, புடலங்காய் பரோட்டா என சுவை அரும்புகளை தூண்டும் வகையிலான உணவு வகைகளை செய்து கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஆல்மண்ட் ரோகா செய்த பத்மபிரியா, மைசூர் பாகு செய்த கலைச்செல்வி, மியாங் கும் செய்த ரபியா, வெண்சோள களி செய்த புவனேஸ்வரி, மஷ்ரூம் கோலா உருண்டை செய்த தெபோஜனி ராய், சிக்கன் ஷீக் கெபாப் செய்த நஃபீசா இலியாஸ், மனோலம் செய்த ஜெயந்தி, கற்கடகம் கஞ்சி செய்த இந்திராணி, 26 உணவு மற்றும் இனிப்பு வகைகள் செய்த மோகனப்பிரியா,10 வகைகளை உள்ளடக்கிய ரங்கிலோ தாலி செய்த மம்தா ஆகியோர் நேரடி சமையல் சுற்றுக்குத் தேர்வாகினர்.

இவர்களில் நஃபீஸா இலியாஸ், மம்தா, மோகனப்பிரியா மற்றும் புவனேஸ்வரி ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.

தமிழ்நாடு முழுதும் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட போட்டியில் தேர்வான போட்டியாளர்களுக்கான இறுதிப் போட்டி சென்னையில் விரைவில் நடைபெறும்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel