மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “எங்களுக்கு மும்மொழி கொள்கை தேவையில்லை இருமொழி கொள்கை தான் எங்களின் கொள்கை.” என்று திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி திமுக சட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையம் சென்றனர்.

பிறகு அவர்கள் அங்கிருந்த பெயர் பலகையில் பொள்ளாச்சி என்று இந்தி மொழியில் எழுதியதை கறுப்பு மையால் அழித்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதேபோல பாளையங்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழித்தனர். இதனிடையே பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, பெயர் பலகையை அழித்த காரணத்தால் திமுகவினர் மீது ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சிறிது நேரத்திலேயே புதிய பெயர் பலகையும் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.