தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிருக்க, கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ச்சியாக பலரும் வெளியேறி வருகின்றனர்.

இதில், காளியம்மாளும் கட்சியில் இருந்து விலகப்போவதாகத் தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அப்போதெல்லாம், அப்படி எதுவுமில்லை என காளியம்மாள் விளக்கமும் அளித்திருக்கிறார். இத்தகைய சூழலில், தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகப்போவதாக மீண்டும் பேச்சுக்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான், “இந்தக் கட்சியில் இயங்குவதற்கும், வெளியேறுவதற்கும் முழுச் சுதந்திரம் இருக்கிறது. இதுவொரு ஜனநாயக அமைப்பு. முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் தங்கை இருந்தார். அவரை அழைத்து வந்தது நான்தான்.
யார் வேண்டுமானாலும் வேறு அமைப்பில் இணைந்து செயல்படத் தோன்றினால் போகலாம். வரும்போது வணக்கம் சொல்வோம். சென்றால் நன்றி செல்வோம். பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருக்கும். அதுமாதிரி, எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். திடீரென்று வருவார்கள், போவார்கள். கட்சியில் இருக்கலாமா அல்லது வெளியேறி வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கலாமா என்று முடிவெடுக்கும் முழு சுதந்திரம் தங்கைக்கு இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.