“2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்…” – திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிதியைக் கொடுக்க முடியாது எனச் சொல்வது சட்ட விரோதமானது.

இது வன்கொடுமைக்கு ஈடான செயல். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை இந்தி மொழி திணிக்கப்படாது என்கிற வாக்குறுதியை, நாடாளுமன்றம் தமிழ்நாடு மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வரலாறு எல்லாம் தர்மேந்திர பிரதானுக்குத் தெரியவில்லை என்றால் அதைத் தேடிப் படிக்க வேண்டும்.

பெ.சண்முகம்

இவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்த பிறகும் தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்புகிறார் என்றால், ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கத்தோடும், தமிழ்நாடு மக்களோடும் மூர்க்கத்தனமான மோதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கக் கூடிய வகையில் ஒன்றிய அரசாங்கம் செயல்படுகிறது.

இதற்கு எதிராகத் தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாள்களாக அந்த பிரச்னை பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க அண்ணாமலை எதிர்பார்த்த திசை திருப்புகிற அரசியலில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதைத் தி.மு.க தலைமை உணரவேண்டும்.

பா.ஜ.க-வுக்கு எதிராக எவ்வளவு வீரியமிக்க போராட்டத்தை நடத்த முடியுமோ அதற்கான முயற்சியில் தி.மு.க ஈடுபட வேண்டும்.  தமிழக அரசு வெளிநாடுகளில் சென்று போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரகசியமாகவே இருக்கின்றன. எங்காவது தொழில் தொடங்கப்பட்டிருக்கிறதா என்பதை அரசு விளக்க வேண்டும். கோவை மாநகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகக் கிடப்பிலேயே இருக்கிறது.

சிபிஎம் பொதுக்கூட்டம்

இப்படி தமிழகம் முழுவதும் ஏராளமான கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வருகிற ஒரு வருடத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play