கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தின் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து கோவை காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். மோசடி தொகை அதிகம் இருக்கும் என்பதாலும், முதலீட்டாளர்கள் மாநிலம் முழுவதும் இருப்பதாலும் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளர்கள் விஜய ராகவன் மற்றும் சக்தி ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். ஆனாலும் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் சென்று சேரவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
இந்நிலையில் கோவை பொருளாதார குற்றபிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Myv3ads நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இதுதவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காலம் தாமதிக்காமல் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளனர்.