சில்லி மஷ்ரூம் பாயசம், இறால் ஃபலாஃபல்… தென் சென்னையில் கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நடத்துகின்றன. 

தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில், 12 வது இடமாக தென் சென்னையில் நடைபெறுகிறது.  சென்னையில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் போட்டியைத் தொடங்கி வைத்த நடுவர் செஃப் தீனா, “ஃபாஸ்ட் புட் அதிகரித்ததால் வீட்டில் சமைப்பது குறைந்து விட்டது. இதனால் மருத்துவ செலவுகள் தான் அதிகரித்துள்ளது.

வீட்டு சமையலையும் நம் முன்னோர் சமையலையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்துகிறோம்” என்றார்.

பன்னாட்டு கலாசாரத்துக்கு பெயர் போன சென்னையில், கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரை உள்ள ஃபேமஸ் உணவு பதார்த்தங்களை சமைத்து அசத்தியிருந்தனர், பங்கேற்பாளர்கள். 

காடை மிளகு வறுவல், வாழைப்பூ வடை, சில்லி மஷ்ரூம் பாயசம், குடைமிளகாய் அல்வா, மூங்கில் அரிசி அக்காரவடிசல், பச்ச மொச்சை ஜாங்கிரி, சாம்பார் கோதுமை கேழ்வரகு களி, இறால் ஃபலாஃபல், இன்ஸ்டன்ட் ஹமுஸ், சைவ மீன், சைவ முட்டை, மீன் அவியல், பத்திரி, ஓட்டடை என உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகள் மட்டுமல்லமல், மாலிக்குலர் காஸ்ட்ரோனமி மூலமாக உணவுகளை காட்சிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

முதல் கட்ட போட்டியாளர்கள் சமைத்த உணவின் தரம், சுவை, செய்முறையை பார்த்து ருசித்து மதிப்பெண் வழங்கி கொண்டிருக்கிறார் செஃப் தீனா. இவர்களிலிருந்து 10 பேர் அடுத்த கட்ட நேரடி சமையல் போட்டியில் களம் காண்பர்கள். 

அவர்களிலிருந்து 3 சிறந்த போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.