NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! – ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது மத்திய, மாநில அரசுக்கு இடையே பெரும் வாக்குவதத்தைக் கிளப்பியது.

இதில், தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க அரசு, “மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் பா.ஜ.க இந்தியைத் திணிக்க முயல்கிறது.” என்று குற்றம்சாட்டி வருகிறது. மறுபக்கம், நாங்கள் இந்தியைத் திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக இந்தி உட்பட ஏதேனும் ஒரு மொழி மாணவர்கள் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்றுதான் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். திமுக இதில் அரசியல் செய்கிறது.” என்று மத்திய பாஜக அரசு கூறிவருகிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான் 10 கருத்துகளைக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

அந்தக் கடிதத்தில்…

* தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஒரு சீர்திருத்தம் மட்டுமல்லாது, நம் மொழி, கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வலுப்படுத்தக்கூடிய மற்றும் இந்தியாவின் கல்வி முறையை உலகத் தரத்துக்கு உயர்த்த முற்படும் ஒரு மாற்றுப் பார்வை.

* பிரதமரின் வழிகாட்டுதலின்கீழ், காசி தமிழ் சங்கமமும், சௌராஷ்டிர தமிழ் சங்கமமும் இணைந்து, தமிழ்நாட்டுக்கும் நாட்டின் பிறகு பகுதிகளுக்கும் இடையேயான பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார சங்கமத்தைக் கொண்டாடுவதற்காக இந்திய அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியும். 2022-ல் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் போது, ​​மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் (CICT) மூலம், 13 இந்திய மொழிகளில் ‘திருக்குறள்’ மொழிபெயர்க்கப்பட்டதை பிரதமர் வெளியிட்டார். மேலும், தற்போதைய காசி தமிழ் சங்கமத்தில், ​​CICT மூலம் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட 41 தமிழ் இலக்கியப் படைப்புகள் உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் இணைந்து நான் வெளியிட்டிருக்கிறேன்.

* இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய கருப்பொருளாகச் சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகிய துறைகளில் அகஸ்திய முனிவரின் பங்களிப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும், உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான முக்கிய போட்டித் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. 2024 செப்டம்பரில் பிரதமர் சிங்கப்பூர் சென்றபோது, ​​இந்தியாவின் முதல் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

* புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சுப்ரமணிய பாரதி இருக்கையை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் தனித்துவமான இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பர்யத்தை கொண்டாட இந்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளையும் பாரத மொழியாகக் கருதுகிறோம். அதன்படி தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

* தேசிய கல்விக் கொள்கையின் மையப் புள்ளியானது, ஒவ்வொரு மாணவரும் தங்கள் தாய்மொழியில் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிசெய்கிறது.

* எந்தவொரு மாநிலத்தின் மீதும், சமூகத்தின் மீதும் எந்த மொழியையும் திணிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். புதிய கல்விக் கொள்கை-2020 ‘மொழி சுதந்திரம்’ கொள்கையை நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் தங்கள் விருப்ப மொழியில் தொடர்ந்து கற்பதையும் உறுதி செய்கிறது. இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், பல்லாண்டுகளாக, கல்வித்துறையிலிருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் கற்பித்தலை மீட்டெடுப்பதும், வலுப்படுத்துவதும் இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

தேசிய கல்விக் கொள்கை (NEP)- 2020

* 1968 முதல் இந்தியாவின் கல்வி கட்டமைப்பின் முதுகெலும்பாக இருப்பதுதான் மும்மொழிக் கொள்கை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. அதனால், இந்திய மொழிகளை முறையாகக் கற்பிக்காமல், அதன் சரிவுக்கு வழிவகுத்தது. காலப்போக்கில், வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு காரணமாகிவிட்டது. இந்தப் புதிய கல்விக் கொள்கை, தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், இந்த வரலாற்றை சரிசெய்ய முயல்கிறது.

* தமிழ்நாடு எப்போதும் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தின் முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் சில சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது. நவீன கல்வியை வடிவமைத்த, விளிம்புநிலை சமூகங்களை உள்ளடக்கி, அவர்களையும் மேம்படுத்தி, கற்றல் சூழலை வளர்த்த இயக்கங்கள் இருக்கும் மாநிலங்களிலும் முன்னணியில் உள்ளது.

* அரசியல் காரணங்களுக்காக தேசியக் கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்பதால், தமிழ்நாட்டின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகளையும், வளங்களையும் இழக்கின்றன. இந்தக் கொள்கை நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்தந்த மாநிலங்கள் தங்கள் தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு ஏற்ப, அதன் செயல்பாடுகளை செயல்படுத்த அனுமதிக்கிறது. மேலும், சமக்ர சிக்ஷா போன்ற மத்திய அரசு ஆதரவு திட்டங்கள், தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. PM SHRI பள்ளிகள் NEP முன்மாதிரியான பள்ளிகளாகக் கருதப்பட்டுள்ளன.

ஸ்டாலின்

* தேசியக் கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்கான அச்சுறுத்தல்களாக மாற்றுவதும் மாநிலத்திற்கு பொருத்தமற்றது. பிரதமருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம், மோடி அரசால் ஊக்குவிக்கப்பட்ட கூட்டாட்சி உணர்வை முழுமையாக மறுப்பதாகும். இந்தப் புதிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் திணிப்பதை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க அல்லாத பல மாநிலங்கள், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், புதிய கல்விக் கொள்கையின் முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன. புதிய கல்விக் கொள்கை கல்வித்தளத்தை விரிவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play