சிறைக்குள் நுழைந்து போட்டோ எடுத்த கியூ பிரான்ச் எஸ்ஐ; வார்டனுக்கு மெமோ; சேலம் சிறையில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி பகல் 2 மணியளவில் உளவுப் பிரிவு எஸ்.ஐ எனக் கூறிக்கொண்டு, டிப் டாப் உடை அணிந்து கொண்ட ஒருவர் சிறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்குச் சிறை அதிகாரிகள் இல்லை. சீப்ஹெட் வார்டனிடம் சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கான உளவுப் பிரிவு என அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.

சிறை

சிறையின் சுற்றுச்சுவர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறிய அவர் சிறையில் வெளிப்பாக்கச் சுவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். அதேபோல் உள்பக்கமும் படம் எடுக்க வேண்டும் எனக் கூறி உள்ளே சென்றுள்ளார். எங்களது உயர் அதிகாரிதான் இப்பணியைத் தன்னிடம் கொடுத்துள்ளதாகக் கூறி சிறைக்குள் சென்றுள்ளார். அங்கிருந்த சீப் ஹெட் வார்டன் சத்யமூர்த்தி அவரைச் சிறைக்குள் அழைத்துச் சென்றார். அவரும் சிறையில் உள்பகுதியை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது கைதி ஒருவரை அழைத்துப் பேசியதுடன், ‘எல்லாம் சரியாகிவிடும் பார்த்துக் கொள்ளலாம்’ என ஆறுதல் கூறிவிட்டு 30 நிமிடத்திற்குப் பிறகு வேகமாக வெளியே சென்று விட்டார். இதுகுறித்து சிறை விஜிலென்ஸ் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு அதிகாரிகள் சிறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் புகைப்படம் எடுத்த காட்சிகள் எல்லாம் பதிவாகி இருந்தது.

உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தாலும் சிறைக்குள் செல்வதற்கு அதற்கான அனுமதி கடிதம் வைத்திருக்க வேண்டும். செல்போனை சிறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. மேலும், புகைப்படம் எடுக்கக் கூடாது. ஆனால் அனைத்தும் இங்கு நடந்துள்ளதால், சிறைக்குள் வந்தது உண்மையான அதிகாரி தானா என்ற சந்தேகமும் எழுந்தது. அதே நேரத்தில் கைதியைச் சந்தித்து ஆறுதல் கூறியதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வினோத் – சேலம் சிறைக் கண்காணிப்பாளர்

இது குறித்து சேலம் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் பேசும்போது, “சிறைக்குள் உளவுப் பிரிவு அதிகாரி என்று கூறி சென்றவர் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நக்சலைட்களைக் கண்காணிக்கக் கூடிய க்யூ பிரான்ச் எஸ்.ஐ தியாகராஜன்.

இவர் சிறைக்குள் இருக்கும் அதிகாரிகள் சிலரிடம் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு, சிறைக்குள் சென்றுள்ளார். மேலும் உள்ளே சென்றவர் செல்போன் வாயிலாகப் படங்கள் எடுத்துள்ளார். மேலும் ஆத்தூரில் இயங்கக்கூடிய தனியார்ப் பள்ளியின் ஏ.ஓ மணிகண்டன் என்பவர் கைதாகி ஆத்தூர் சிறையிலிருந்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். விசாரணையில் எஸ்.ஐ தியாகராஜனின் மகன் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்தது. மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிறைக்குள் அனுமதி அளித்த சீப் வார்டன் சத்திய மூர்த்திக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஐ தியாகராஜன் மீது சிறைத் துறை மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளனர்” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play