தந்தையின் திருமணம் மீறிய உறவு; தட்டிக்கேட்ட குழந்தைகள்; கோபத்தில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே . கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தங்கி சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண மீறிய உறவு இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அசோக்குமார் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை அவரது செல்போனில் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய அசோக் குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கதவைத் தட்டி வீட்டுக்குள் புகுந்த அசோக்குமார் தூங்கிக்கொண்டிருந்த மனைவி, குழந்தைகளை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குழந்தைகளை வெட்ட முயன்ற போது மனைவி தடுத்ததில் அசோக்குமாருக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் படுகாயம் அடைந்த அசோக்குமாரின் மனைவி, ஒரு குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே போலீஸ் மோப்பநாய், போலீஸ் பிடியில் சிக்கிய அசோக்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் தனது திருமண மீறிய உறவை மறைப்பதற்காக மனைவி குழந்தைகளை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடியது தெரியவந்தது.