“பெரியவர் கேட்கச் சொன்னார்…” – எடப்பாடி பழனிசாமி – ஜி.கே.மணி சந்திப்பு பின்னணி

2021 சட்டமன்றத் தேர்தலில், ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக கட்சிகள் பிற்பாடு பிரிந்துசென்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பிடித்த பாமக, பத்து தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக-வுக்கு எதிரான பிரசாரத்தையும் பாமக-வினர் அப்போது கையில் எடுத்தனர். இந்தச் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பாமக கெளரவத் தலைவரான ஜி.கே.மணி.

அன்புமணி, ஜி.கே.மணி

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த அச்சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பாமக சீனியர்கள் சிலர், “தன்னுடைய மைத்துனர் மகனின் திருமண விழாவுக்கான அழைப்பிதழை அளிக்கத்தான் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் ஜி.கே.மணி. அதோடு, மாநிலங்களவை சீட் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம், வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே, பாஜக-விடம் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க பேசப்பட்டது. ஆனால், பத்து மக்களவை சீட்டுகளை எங்களுக்கு ஒதுக்கிய பாஜக, மாநிலங்களவை சீட் தருவதாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. ‘பத்து சீட்டில், ஏதாவது சில சீட்டுகளில் வென்றுவிடலாம். மத்திய அமைச்சரவையிலும் இடம்பெறலாம்’ என அசால்ட்டாக இருந்துவிட்டது தைலாபுரம் தோட்டம். ஆனால், ஒரு சீட்டில்கூட வெற்றிப்பெற முடியவில்லை.

அன்புமணியின் எம்.பி பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, தைலாபுரத்திலிருந்து பாஜக தரப்பிடம் பேசிப்பார்த்தனர். ‘வேறொரு மாநிலத்திலிருந்து ஒரு எம்.பி சீட் தரலாமே…’ எனக் கோரிக்கையையும் முன்வைத்தனர். அதற்கு எந்த பதிலையும் பாஜக மேலிடம் அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்துதான், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் ஜி.கே.மணி. ‘பாமக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால், இரண்டு சீட்டுகளை அதிமுக பெற முடியும். நாங்கள் ஆதரவு தருகிறோம். எங்களுக்கு ஒரு சீட் தாருங்கள்..’ எனப் பேசியிருக்கிறார் ஜி.கே.மணி. அதற்கு, ‘இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பலத்தின்படி பார்த்தால், ஒரு சீட் தான் உறுதியாக எங்களுக்குக் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த சீட்டையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்பார்க்கிறார். இதற்கிடையே, தேமுதிக தரப்பிலும் சீட் எதிர்பார்க்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அக்கட்சியுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, அவர்கள் எம்.பி சீட் கேட்கிறார்கள். யாருக்கு அளிப்பது என்பது புரியாமல், நாங்களே தவிக்கிறோம். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு உங்களுக்கு சீட் அளித்தால், தேவையற்ற சங்கடம் ஏற்படும்’ என பதிலளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார்

எடப்பாடியின் பதிலில் ஏமாற்றமடைந்த ஜி.கே.மணி, ‘உங்களுடன் கூட்டணியில் இருக்கத்தான் பெரியவர் பெரிதும் விரும்புகிறார். இந்த மாநிலங்களவை சீட் மட்டும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டால், அதைவைத்தே பாமக – அதிமுக கூட்டணி மீண்டும் மலரும். உங்களுக்கு அதில் விருப்பம் இருக்கிறதா என்பதை பெரியவர் கேட்கச் சொன்னார். நன்றாக யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்…’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில், பெரிய நெருக்கடியைச் சந்தித்திருப்பது எடப்பாடி பழனிசாமிதான். 2021 சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகமும் ஜெயக்குமாரும் தோல்வியைத் தழுவினர். மே 2022-ல் நடந்த மாநிலங்களவை தேர்தலில், அவர்கள் இருவருமே சீட் எதிர்பார்த்தனர். ஆனால், தன்னுடைய ஆதரவாளரான இராமநாதபுரம் தருமருக்கு ஒரு சீட்டை ஒதுக்க வைத்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். மற்றொரு சீட் சி.வி.சண்முகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஜெயக்குமார் அந்தரத்தில் விடப்பட்டார். அப்போது எழுந்த பஞ்சாயத்துதான், பிற்பாடு கட்சியே இரண்டாக உடையும் அளவுக்குப் போனது. மீண்டும் அதே போன்றதொரு சூழல் உருவாகியிருக்கிறது.

ஜெயக்குமாருக்கு உறுதி செய்யப்பட்ட ஒரு எம்.பி சீட்டை, தேமுதிக-வுக்குக் கொடுத்தால், உட்கட்சிக்குள்ளேயே பிரச்னைகள் வெடிக்கலாம். பாமக-வை கூட்டணிக்குள் அரவணைத்தால், எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் இரண்டு எம்.பி சீட்டுகள் அதிமுக-வுக்கு உறுதியாகக் கிடைக்கும். ஆனால், கூடுதலாக கிடைக்கும் ஒரு சீட்டை பாமக-வுக்குக் கொடுக்க வேண்டியது வரும். அதனால்,தேமுதிக கோபித்துக்கொண்டு கூட்டணியிலிருந்து வெளியேறலாம். ஆக, இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்றனர் விரிவாகவே.

பிரேமலதா விஜயகாந்த்

இதற்கிடையே, பிப்ரவரி 21-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவரது சென்னை க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் சில பாமக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தைலாபுரம் சொல்லியனுப்பிய தகவலையும் பாஸ் செய்திருக்கிறார்கள். ஒரு எம்.பி சீட்டை மையமாக வைத்து ஆடுபுலி ஆட்டமே அதிமுக-வில் நடக்கிறது. “எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யார் வேட்பாளர் என்பதை விரைவில் நாங்கள் அறிவிப்போம்…” என பொதுவெளியில் போட்டுடைத்து, அதிமுக-வுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக-விற்குள்ளும், “நாடாளுமன்றத் தேர்தலில் நம்மோடு நிற்காமல், பாஜக பக்கம் சென்றது பாமக. அவர்களுக்கு ஏன் நாம் சீட் தர வேண்டும்..? 2026 சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்வது தானே சரியாக இருக்கும்..” என பேச்சுகள் எழுகின்றன. இந்த ஒரு எம்.பி சீட் விவகாரத்தால், புதிய கூட்டணி உருவாகுமா… அல்லது, இருக்கும் கூட்டணி உடையுமா என்பதெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் காய் நகர்த்தலை பொறுத்தே இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.