`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

மத்திய அமைச்சரின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் குரலெழுப்பப்பட்டது. ஆளும் கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியும் பிற அரசியல் அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்திய குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கர் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தின.

அவர், “ஒரு குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற வேண்டுமென்றால் அதன் கலாசாரத்தை கையகப்படுத்த வேண்டும். அதன் மொழியை அழிக்க வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள், நம்முடைய வழிபாட்டுத் தலங்களுக்கு மேல் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதன் மூலம் அதையே செய்தார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்

98வது அகில பாரத மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான உரையாடலில் அவர், “நமது மொழி செழிக்கவில்லை என்றால், நமது வரலாறும் செழிக்காது” எனப் பேசியுள்ளார்.

Kanimozhi ட்வீட்

ஜெக்தீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காட்டி, இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

முற்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மொழியை அழிக்க முயன்றாகக் கூறும் ஜெக்தீப் தன்கரின் பேச்சை, இன்று மத்திய அரசு இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை சிதைக்க முயல்வதாக பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார் கனிமொழி.

ஜகந்தீப் தன்கரின் பேச்சு குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என ட்வீட் செய்துள்ளார்.