`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!’ – அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்… திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்களின் குழந்தைகளாகவே உள்ளனர். இந்தப் பள்ளியில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் (பழைய கழிவறைக் கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது) மாணவ மாணவிகள் பள்ளியின் அருகில் உள்ள குட்டையின் ஓரம் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழித்து வருகின்றனர். இதனை அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் பெரும் குற்றம்சாட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர்!

இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரின் பெற்றோரிடம் பேசினோம். “என்னோட ரெண்டு குழந்தைகளும் இந்தப் பள்ளிக்கூடத்துல தான் படிச்சிக்கிட்டு வராங்க. கடந்த ஒன்றரை வருஷமா டாய்லெட் கட்டடம் இல்லாம புள்ளைங்க ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு வர்றத போறப்பயும் வாறப்பையும் பார்க்கிறேன். அந்த இடம் நல்ல இடமா இருந்தாகூட எங்கள மாதிரி பெற்றோருக்கு ஒரு கவலையும் இல்லை. பக்கத்திலேயே ஒரு குட்டை ஒன்னு கிடக்குது. தெரியாத்தனமா புள்ளைங்க அதுல விழுந்திடுமோ’ங்கிற பயம் என்ன போல பெற்றோரான ஒவ்வொருத்தருக்கும் இருந்துட்டு இருக்கு.

இத பள்ளிக்கூட எஸ் எம் சி கூட்டத்திலேயும் ஹெச்.எம் டீச்சர்’டையும் பல தடவை கேட்டுட்டேன். அவுங்க இந்தா அந்தா’னு நேரத்தையும் காலத்தையும் கடத்திட்டு இருக்காங்க. நாங்க பட்ட கஷ்டத்தை எங்க புள்ளைங்க படக் கூடாது’ன்னு தான் வம்பாடு பட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனா அங்க அவுங்க படுற இந்த கஷ்டத்தை பார்க்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு! அரசாங்கம் பள்ளிக்கூடத்துக்கு அதை இதை பண்றேன்’னு சொல்லுது… அப்படியே இந்தப் பள்ளிக்கூடத்துக்கு ஒரு டாய்லெட் கட்டிக் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்” என்று வருத்தத்துடன் கூறினார்.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, சரியான விளக்கம் தராமல் நமது பேச்சினை தட்டிக்கழித்தார்!
இது குறித்து அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நாகேஷிடம் பேசினோம். “இப்பள்ளியின் கழிப்பறை தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலிருந்து பள்ளி தலைமை ஆசிரியரிடமும் ஆதிதிராவிட நலத்துறையிடமும் பலமுறை கோரிக்கைகளை வைத்ததுண்டு. ஆனால் இன்றளவும் கழிப்பறை பயன்பாடின்றி குழந்தை செல்வங்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பது பெரும் வேதனையாக உள்ளது! சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி இப்பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருவாரூர் ஆதிதிராவிடர் நல அலுவலர் அமுதாவைச் சந்திக்க இரண்டு முறை, அவரின் அலுவலகத்திற்குச் சென்றோம். அவரின் உதவியாளர் ஒருவர், `மேடம் மீட்டிங்கில் இருக்கிறார்’ என்றார். பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நமது அழைப்பை ஏற்கவில்லை.

இன்றளவும் பல கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு கழிப்பறைகள் இல்லாமலும், இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருக்கிறது என்பது கல்வியாளர்கள் தரப்பிலும் பெற்றோர்கள் தரப்பிலும் பெரும் வேதனையாக தொடர்கிறது… சம்பந்தப்பட்ட துறைகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது!