“1987 கார்ட்டூன் விவகாரம் MGR நினைத்தது இதுதான்” – விளக்கும் கார்ட்டூனிஸ்ட் விவேகானந்தன்

அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை போர் விமானத்தில் கைவிலங்கிட்டு கூட்டி வந்த சம்பவம் தொடர்பாக விகடன் ப்ளஸ் இணைய இதழில் கார்ட்டூன் வெளியாகி இருந்ததை அறிவீர்கள். இதையடுத்து விகடன் இணையதள முடக்கப்பட்டதையும் அறிவீர்கள். நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பயணத்தில், கார்ட்டூனுக்காக அடக்குமுறையைச் சந்திப்பது விகடனுக்குப் புதிதல்ல.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த 1987ம் ஆண்டே ஒரு சம்பவத்தைச் சந்தித்து வெற்றியும் கண்டிருக்கிறது அது.

‘மேடையில இருக்கிற இரண்டு பேர்ல யார் எம்.எல்.ஏ யார் மந்திரி?’

‘ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ., முகமூடி கொள்ளைக்காரர் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி..!’

29.03.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு இது. இத்துணுக்கிற்காக வரையப்பட்ட கேலிச்சித்திரம் அட்டைப்படமாகவும் வெளியாக, இதழ் வெளியான சில நாள்களிலேயே சட்டமன்றத்தில் கார்ட்டூனை பிரச்னையாக எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் கார்ட்டூன் குறித்துக் கேள்வி எழுப்ப, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கார்ட்டூனுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, “அடுத்து வரும் ஆனந்த விகடன் இதழின் முதல் பக்கத்திலேயே வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உரிமைக் கமிட்டி விசாரணை இல்லாமலேயே சட்டசபை தண்டனையைத் தீர்மானிக்கும்” என்றார்.

விகடன் கார்ட்டூன்

தொடர்ந்து 05-04-1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இப்படி ஒரு தலையங்கம் வெளியானது..

‘ஒரு கொலைகாரனுக்குக்கூட, இந்தியச் சட்டம் அவன் பக்க நியாயத்தை விளக்கத்தைக் கூற ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது! ஆனால், நம் மதிப்புக்குரிய சபாநாயகரோ ‘என்ன, ஏது’ என்று விளக்கமளிக்க ஒரு சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அளிக்காமல் ‘மன்னிப்புக் கேள் – அதாவது குற்றத்தை ஒப்புக்கொள். இல்லையென்றால் தண்டனை அளிக்கிறேன்’ என்று தீர்ப்பு கூறியிருக்கிறார். இது ஒருவகை மிரட்டலே! குற்றவாளியா, இல்லையா என்ற நீதி விசாரணையின்றி எடுத்த எடுப்பிலேயே ‘தண்டனை’ என்கிற மிரட்டல்! ‘நம் கைவசம் பதவியும் அதிகாரமும் இருக்கிறது. விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று தமிழக சபாநாயகர் தீர்மானித்தால் சந்தோஷமாக தண்டனை கொடுக்கட்டும்.

அப்படிச் செய்வதனால், ‘ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான்’ என்கிற வாதத்தையே மேலும் வலுப்படுத்தும்! வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு வைத்துக் கொண்டு, சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழக அரசு செயல்படுகிறது என்ற எண்ணத்தையே உறுதிப்படுத்தும்!’

விவேகானந்தன்

மன்னிப்புக் கேட்க மறுத்து தலையங்கம் வெளியானவுடன் 04-04-1987 இல் ஆனந்த விகடனின் நிர்வாக இயக்குநரும் ஆசிரியருமான பாலசுப்பிரமணியனுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். பாலசுப்பிரமணியன் அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை பத்திரிகையாளர்களும் கொதித்தெழுந்தனர். அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் வலுவாக ஒலித்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவுக் கரம் கோர்த்த கைகள் சிறைக்கம்பிகளைச் சுக்கு நூறாக்கின. அரசு பின்வாங்கியது. மூன்றே நாட்களில் விகடன் ஆசிரியர் விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், தன்னைச் சிறையிலடைத்தது முறையற்ற விதம் என்றும் அதற்கு அடையாள நஷ்ட ஈடு வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் அவர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பத்திரிகைகளின் கருத்துச்சுதந்திரத்தைக் காக்கும் வகையில் 1994 இல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியதோடு விகடனின் ஆசிரியருக்கு 1000 ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் 1987ம் ஆண்டு அந்த கார்ட்டூனை வரைந்த விவேகானந்தனிடம் பேசினோம்.

”திரும்பிப் பார்த்தா இப்ப நடந்த மாதிரி இருக்கு. ஆனாலும் விகடன் வரலாற்றில் முக்கியமான மறக்க முடியாத நிகழ்வு. அந்த வார இதழ் வெளியானதும் சட்டசபையில அது குறித்துப் பேசியது அன்றைய செய்தித் தாள்கள்ல வெளியாகி பரபரப்பா பேசப்பட்டது. மன்னிப்பெல்லாம் கேக்க முடியாதுன்னு விகடன் உறுதியா இருந்ததால்  சட்டசபை தண்டனயை அறிவிச்சது. அந்தச் சமயத்துல எம்.டி.படப்பை வீட்டுல இருந்தார். அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் அலுவலகம் கிளம்பி வந்திட்டிருந்தப்போ வழியிலேயே கைது பண்ணினதா ஞாபகம்.  பிறகு நடந்ததெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.

Vikatan cartoon
Vikatan cartoon

அந்த சம்பவத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆருக்கு கைது செய்யணும்கிற தீவிரமான நோக்கமெல்லாம் இல்லைன்னே சொல்வேன். ஏன்னா, எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணி மகன் என்னுடைய கிளாஸ் மேட். அவர் மூலமா எம்.ஜி.ஆர் பத்தி  சில விஷயங்கள் எனக்குத் தெரியும். முதலமைச்சரா இருந்தாலுமே தினமும் எல்லா செய்தித்தாள்களையும் படிக்கிற பழக்கம் அவர்கிட்ட கிடையாது. அதனால அவர் இந்த மாதிரி விமர்சனங்களைப் பெரிசா கண்டுக்க மாட்டார்னுதான் சொன்னாங்க.

விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன்

சினிமாவுல பிஸியா நடிச்சிட்டே இருந்ததால் பேப்பர் படிக்கிற பழக்கத்தை அவர் வச்சுக்கலைன்னு சொன்னாங்க. முக்கியமான சம்பவம்னா யாராச்சும் அவருடைய கவனத்துக்குக் கொண்டு போன பிறகு அது பத்திப் பேசுவார்.

விகடன்ல கார்ட்டூன் வெளியானது பத்தி அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தான் எம்.ஜி.ஆர்..கிட்ட போய் ‘இதை இப்படியே விடக்கூடாது’ன்னு சொல்லி அழுத்தம் தந்தார்னு சொன்னாங்க.

எம்/.டி. கைதானதும் சோ, இந்து என்.ராம், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் எம்.ஜி.ஆர்.கிட்ட போய் இது விஷயமா பேசினாங்க. பத்திரிகைகள் மேல இந்த மாதிரியான நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகும்னும், கலைஞர் ஏற்கெனவே இந்த விஷயத்தைக் கையிலெடுத்துட்டதால பிரச்னை பெரிசாகலாம்னு சொன்னாங்க.

அதனால எம்.ஜி.ஆர் உடனடியா நடவடிக்கையைக் கைவிடச் சொல்ல, எம்.டி.விடுவிக்கப்பட்டார்” என்றவரிடம்,

இப்போது வெளியான மோடி கார்ட்டூன் விவகாரம் குறித்தும் கேட்டோம்,

”நானும் அந்தக் கார்ட்டூனைப் பார்த்தேன். அந்த நிகழ்வு பத்திய செய்தியையும் படிச்சேன். எனக்கு என்ன தோணுச்சுன்னா ஃப்ளைட்ல லக்கேஜ்களை ஒருபக்கம் ஏத்துவாங்க பாருங்க, அப்படி மூட்டை கட்டி மக்களை ஏத்துற மாதிரி படம் போடணும்னு தோணுச்சு. கார்ட்டூன் வரையறவங்களுக்கு இப்படிதான் சிந்திக்கத் தோணும்” என்கிறார்.