US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா – வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ, இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள், கை, கால்களில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், கொலம்பிய அரசு கொலம்பியர்களை கைவிலங்கிட்டு அனுப்பும் இராணுவ விமானத்தை கொலம்பியாவில் தரை இறங்குவதற்கான அனுமதியை மறுத்தது. மேலும், “எங்கள் நாட்டு குடிமக்களை இப்படி தரம் தாழ்ந்த முறையில் குற்றவாளிகளை போல கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை ” – என அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, கொலம்பியாவின் மீது அதிகமான வரிகளை விதிப்போம் என ட்ரம்ப் மிரட்டியும், தங்களின் சொந்த விமானப்படை விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, கண்ணியத்தோடு அவர்களை கொலம்பியாவுக்கு அழைத்து வந்தது. ஆனால், மூன்று முறை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் மூன்றுமுறையும் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விமானநிலையத்தில் விலங்கிடப்படும் காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “ASMR: Illegal Alien Deportation Fligh” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை `மனிதாபிமானமற்ற செயல்’ என்று பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் எலான் மஸ்க் இந்த வீடியோவுக்கு `Haha wow’ என ரிப்ளே செய்திருக்கிறார்,