செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பெரும்பாலானோர் கட்டண கழிவறையையே பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

செஞ்சியில் மிகப் பிரபல சுற்றுலா தளமான செஞ்சி கோட்டை அமைந்துள்ளது. செஞ்சி கோட்டையைப் பார்வையிடுவதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதோடு, அவர்கள் மற்ற ஊர்களுக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்வதற்கு இங்கு சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு காத்திருக்கும் பொதுமக்கள் தங்களின் அவசர நேரத்தில்  பொது கழிவறை இல்லாததால், கட்டண கழிவறையைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட பேருந்து வசதிக்கு மட்டுமே பணம் எடுத்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதனால் மிகவும் அவதிப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் கூறினர்.

கூடுதலாக விசாரித்த பிறகே தெரிந்தது, தற்போது கட்டண கழிப்பறை எனப் பலகை வைத்து பணம் வசூலிப்பது பொது கழிப்பறை என. மேலும் கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு தான் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.

பொது கழிவறையைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தோம். அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் நம்மைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தனர்.

இது குறித்து, விகடன் இணையதளத்தில்`செஞ்சி: `காசிருந்தா கழிவறையைப் பயன்படுத்துங்க..’ – பொது கழிவறையில் கட்டண `அடாவடி!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

விகடன் செய்தி எதிரொலியாக, பொது கழிவறையில் நடைபெற்று வந்த கட்டண வசூலுக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. `இலவச கழிவறை’ என்று குறிப்பிடப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.