திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் நவம்பர் 28-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அலமாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொலை தொடர்பாக மூன்று மாதங்களாகியும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் குறித்த எந்தத் தடயமும் போலீஸாருக்கு கிடைக்காததால், செல்போன் டவர் மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதிலும், குறிப்பிட்ட அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மூன்று கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் தங்களை அடித்து சித்ரவதைபடுத்துவதாக தெய்வசிகாமணி தோட்டத்தில் வேலை பார்த்த பால்ராஜ் லத்தியால் அடித்த காயங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பழவஞ்சிபாளைத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில், `தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் ஆட்டுக்கல் கொத்தும் தொழிலைச் செய்து வருவதாகவும், டிசம்பர் 20-ஆம் தேதி முதல் தங்கள் பகுதிக்கு அவிநாசிபாளையம் போலீஸார் வந்து விசாரணை என்ற பெயரில் தான் உள்பட ஹரிதாஸ், விஷ்ணு, அர்ஜுன், வீரக்குமார், ராஜாமணி, விஜய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று கொலையை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து துன்புறுத்துகின்றனர்’ என்றும் கூறியுள்ளார்.

மேலு, `குறிப்பாக ஹரிதாஸ் என்பவருக்கு பெருந்தொழவு பகுதியில் சொந்தமாக வீடு உள்ள நிலையிலும், திருப்பூரில் ஆட்டோ ஓட்டி வருவதால் நீண்ட தொலைவு காரணமாக பூங்கா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நவம்பர் 29-ஆம் தேதி அன்று பெருந்துறை பகுதியில் இருந்து வீட்டைக் காலி செய்து பூங்கா நகர் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இதனால் அவரைத் தனியாக அழைத்து அடித்து துன்புறுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலையை ஒப்புக்கொள்ள மிரட்டுகின்றனர். பணம் தருவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். எந்த தவறும் செய்யாத தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” என புகார் மனு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “மூவர் கொலை தொடர்பாக பழங்குடி மக்களிடம் விசாரணைதான் நடத்தினோம். யாரையும் கொலையை துன்புறுத்தவில்லை” என்றனர். கொலையை ஒத்துக்கொள்ளுமாறு பழங்குடியின மக்களை போலீஸார் அடித்து துன்புறுத்துவதாக எழுந்த புகார் திருப்பூர் மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.