கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த17 வயது மாணவி ‘Snapchat’ ஆப்பை ஆக்டிவாக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி வரும் சில கல்லூரி மாணவர்கள் அவருக்குப் பழக்கமாகியுள்ளனர்.

மூன்று தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள் அங்கு தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்தனர்.
Snapchat ஆப் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து அந்த கல்லூரி மாணவர்கள், மாணவியை தங்களின் அறைக்கு அழைத்துள்ளனர். அதை நம்பி மாணவியும் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவர்கள் அவரை அறையில் அடைத்து ஏழு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மாணவி நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை என்பதால் அவரின் பாட்டி இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சிறிது நேரத்தில் மாணவி வீடு திரும்பினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமை குறித்து கூறியுள்ளார். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த உக்கடம் போலீஸார்,

கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது, போலீஸ்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனை அளிக்கிறது.`குற்றம் நடந்தபின் கைது செய்து விட்டோம்’ என சொல்லும் முதலமைச்சர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார்.

தனக்குத்தானே ‘அப்பா’ என புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு அந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா. பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் துறந்துவிட்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனம். கோவை பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள் என பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

குற்றவாளி திமுக-வைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக ‘அப்பா’, ‘அண்ணன்’ என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் கூறுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.