சேலம்: சிறைக்குள் செல்போன் விற்பனை; சிக்கிய சிறைக்காவலர் சஸ்பெண்ட்; விசாரணையில் பகீர் தகவல்கள்!

சேலம், அஸ்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது ஆண்களுக்கான மத்திய சிறைச்சாலை. இதில், 1,000 மேற்பட்டோர் தண்டனைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாகச் சிறைத்துறைக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவி வருவதாகச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மத்தியச் சிறையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்துவரும் கைதியைச் சந்திக்க வழக்கறிஞர் ஒருவர் வந்துள்ளார். அவர், சம்பந்தப்பட்ட கைதியிடம் நலம் விசாரிப்பது போன்று பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு டேப் சுற்றிய பொட்டலத்தைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கி பைக்குள் போட்டதை, சிறைத்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராவில் கண்காணித்துப் பிடித்தனர்.

அந்நபரிடம் சோதனை செய்ததில் பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பிரித்தபோது, அதில் கார்பன் பேப்பர் சுற்றி உள்ளுக்குள் கஞ்சா, சிம்கார்டு, டேட்டா கேபிள் போன்றவை இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் வழக்கறிஞர், சிறைக்கைதி, அவருக்கு உதவியாக இருந்த காவலர்கள் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சேலம் மத்திய சிறை

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதே சிறைச்சாலைக்குள் செல்போன் விற்பனை, கஞ்சா விற்பனை செய்து சிறைக்காவலர் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம், மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முககுமார் (33). இவர் சேலம் மத்தியச் சிறைச்சாலையில் முதல் நிலைக்காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஓசூர் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்துவரும் முபாரக் (கூலிப்படை) எனும் கைதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முபாரக்கிடமிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்போன் கைப்பற்றப்பட்டது.

அதிலிருந்து சிறைக்குள் இருந்து வெளியே சென்றுள்ள செல்போன் டவர்களை கொண்டு சம்பந்தப்பட்ட போன் எப்போதெல்லாம் ஆன் ஆகியுள்ளது என்பது கண்டறியப்பட்டது. அதன்மூலம் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு அடிக்கடி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து அழைப்புகள் வந்து சென்றது தெரியவந்தது. அதில், ஒரு எண் மட்டும் அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. அதனை ட்ராக் செய்தபோது கோழி பிரகாஷ் எனும் ரவுடியின் செல்போன் எண் என்பது தெரியவந்தது. அந்த நபரை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வினோத் – சேலம் சிறைக் கண்காணிப்பாளர்

இதுகுறித்து சேலம் சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத்திடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட ரவுடி முபாரக் முலம் கோழி பிரகாஷ் போன்றோர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்ததில், சிறையில் முதல் நிலைக்காவலராகப் பணிபுரியும் சண்முக குமார் அமேசான், ஃப்லிப்கார்ட் மூலம் மிகச் சிறிய அளவிலான செல்போன்களை ஆர்டர் செய்து சிறைக்குள் இருக்கும் ரவுடிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அவ்வாறு 1000 ரூபாய் செல்போனை.. 15 ஆயிரத்துக்கு விற்று வந்துள்ளார். மேலும் இவர் அவ்வப்போது முக்கிய ரவுடிகளுக்குச் சிறப்பான கவனிப்பு செலுத்துவதால், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள பங்களாவில் இவருக்கு மதுவுடன் சிறப்பான கவனிப்பும் இருந்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலம் முதற்கட்டமாகச் சம்பந்தப்பட்ட காவலர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play