முடக்கப்பட்ட விகடன் இணையதளம்; ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சென்னை பத்திரிகையாளர் மன்றம்! – முழு விவரம்!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. அந்த முடக்க நடவடிக்கை சம்பந்தமாக அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் என பலதரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

அந்தவகையில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒரு ஆர்பாட்டத்தை அறிவித்து இப்போது நடத்தி வருகிறது.

விகடனின் இணையதளம் முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சென்னை பத்திரிகையாளர் மன்றம் அந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘விகடன் நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

விகடன் நிறுவனத்தின் இணையதளம் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் முடக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். இதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியர்கள் நடத்தப்பட்டவிதம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் வகையில் விகடன் குழுமத்தின் ஒரு அங்கமான விகடன் இணைய இதழில் ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் விகடன் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதினர்.

Chennai Press Council protest

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, கேலிச்சித்திரம் வெளியிட்ட விகடன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். மாநில பாஜக தலைவர்கள் பலர், விகடன் நிறுவனத்திற்கு எதிராக அருவெறுக்கத்தக்க கருத்துகளை கூறிவந்தனர். இந்நிலையில், நேற்று (15.02.25) விகடன் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் விகடன் இணையதளம் வேலை செய்யவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ளனர். முடக்கம் தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவ்வாறாக தகவல்கள் வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச்சித்திரம் என்பது இதழியல்துறையின் பிரிக்க முடியாத அங்கமாகும். மிகவும் சிக்கலான கருத்துகளை கேலிச்சித்திரம் மூலம் மக்களுக்கு எளிதில் புரிவைக்கலாம் என்ற வகையில் அது பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான கருத்து ஆயுதமாகும். அதை முடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை முடக்கும் செயலாகும். ஆகவே, விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனைத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துரிமையை பாதுகாக்க, நூற்றாண்டு கண்ட விகடன் நிறுவனத்துடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.’ என தீர்க்கமாக கூறியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3:30 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர். விகடன் மீது எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் சேப்பாக்கத்தில் அந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது.