சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் அய்யாசாமி. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு, புல்லட் பைக்கில் வீட்டுக்கு வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஆயுதங்களால் அய்யாசாமியைத் தாக்கி கைகளில் கடுமையாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகாயமடைந்த மாணவர் அய்யாசாமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் மேலப்பிடாவூர் கிராமத்திற்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி ஆஷிஸ் ராவத் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும், மேலப்பிடாவூர் கிராமத்தைச் சுற்றியுள்ள பட்டியல் சமூக மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கவும், தொடர்ந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் ஆணைய இயக்குநர் பரிந்துரை செய்தார்.

இதனைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அய்யாசாமியை மருத்துவக்குழுவினரின் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டது. தனியறையில் வைத்துத் தாக்குதல் சம்பவம் குறித்தும், ஏற்கனவே இது போன்று சாதிய ரீதியான கொடுமைகள் நடந்தது குறித்தும் விசாரணை நடத்தியவர், மாணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் இயக்குநர் கேட்டறிந்தார். அப்போது மதுரை மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினர் உடன் இருந்தனர்.
மாணவரைத் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play