புதுச்சேரி: “நாராயணசாமி ஆட்சியில் 174 கொலைகள், 366 போக்சோ வழக்குகள்” – பட்டியல் போட்ட அமைச்சர்

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில், ஒரே இடத்தில் மூன்று பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அதையடுத்து தவளக்குப்பம் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் நடந்த மூவர் கொலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரௌடிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே புதுச்சேரி காவல்துறையில் `ஆபரேஷன் திரிசூல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது மேலும் `ஆபரேஷன் வேட்டை’ தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல மாநிலத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் ரோந்துப் பணிகள் முடக்கிவிடப்படுகின்றன.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் `டாப் – 10’ ரௌடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் நிலையங்களில் தனியாக போலீஸார் நியமிக்கப்பட இருக்கின்றனர். மேலும் புதுச்சேரி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நள்ளிரவு 12 மணி வரை கடைகள் நடத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தவளக்குப்பம் தனியார்ப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். புதுவை மக்களின் பாதுகாப்பு கருதி அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாராயணசாமி, நமச்சிவாயம்

குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் ஆட்சியில் கொலைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் என் மீது ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. இனியும் அவர் இப்படியான குற்றச்சாட்டுகளைக் கூறினால் நீதிமன்றத்தை நாடி அவர் மீது வழக்குத் தொடருவேன்.

உண்மையில் அவர் தலைமையிலான 2016-2021 காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகமான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவருடைய ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 413. அதில் போக்சோ வழக்குகள் 36, பாலியல் வன்கொடுமை வழக்குகள் 47. அதேபோல 174 கொலைகளும், 131 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. மேலும், 222 செயின் பறிப்பு வழக்குகள், 92 வழிப்பறி வழக்குகள், 24 வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி

அதேசமயம் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குண்டர் சட்டத்தின் கீழ் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play