விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது.

மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து கண்டன முழக்கங்களோடு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலில் பேசிய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஆசீஃப், “அமெரிக்காவிலிருந்து சுமார் 25 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் ஆடு மாடுகளை போல விலங்கிட்டு கட்டி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இதேபோல அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதை அந்தந்த நாட்டு அதிபர்கள் எதிர்த்தனர்.

சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இது தவறு என்றனர். அந்த சமயத்தில், இந்தியா தரப்பிலிருந்து ஒரு சின்ன எதிர்ப்புகூட வரவில்லை. உலகளவில் நாங்கள்தான் பல போர் நிறுத்தங்களுக்கு காரணமாக இருக்கிறோம். நாங்கள் தான் விஸ்வகுரு என்று கூறும் ஆட்சியாளர்கள், இப்படி கொடுங்கோன்மையாக இந்தியாவின் குடிமக்கள் நடத்தப்படுவதை எதிர்த்து வாய் திறக்கவில்லை. இதை கேள்வி எழுப்புவது ஒரு பத்திரிகையின் நியாயமான நடவடிக்கையா இல்லையா? இந்த விவகாரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதை விட ஒரே ஒரு கேலிச்சித்திரத்தின் மூலமாக நாம் இதை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்து விடலாம். இந்திய குடிமக்கள் இப்படியாக அவமானப்படுத்தப்படுவது இந்தியாவில் உள்ள எல்லா குடிமக்களும் அவமானப்படுத்தப்பட்டதற்கு சமம். அந்த வகையில், இந்த அவமானத்தை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது ஒரு பத்திரிகை துறையின் கடமையா இல்லையா? அந்த வகையில்தான் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டது.
கார்ட்டூன் வெளியான அடுத்தடுத்த நாட்களில் பாஜக-வைச் சேர்ந்த தலைவர்கள் பல அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். திடீரென்று ஒரு நாள் விகடனின் இணையதளம் முடக்கப்படுகிறது. இதற்கான காரணம்கூட விகடன் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை. தொடக்கத்தில் அதை ஒரு தொழில்நுட்ப கோளாறு என்று நினைத்தவர்கள், ஒரு கட்டத்தில் அரசால் முடக்கப்பட்டது என்பதை அறிந்தனர். அந்த சமயத்தில்தான் பாஜக-வின் மாநில தலைவர் இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும் ஒன்றிய அமைச்சகத்துக்கும் ஒரு புகாரை அனுப்பியிருக்கிறார். அதை வைத்துதான் நம்மால் இதை முடக்கியது ஒன்றிய அரசு தான் என்ற முடிவுக்கு வர முடிந்தது. ஆனாலும் அன்றைக்கு அதிகாரபூர்வமான தகவல் கொடுக்கப்படாமலேயே இருந்தது. 24 மணி நேரம் கழித்துதான் முடக்கப்பட்டிருக்கும் தகவலையே தெரியப்படுத்துகிறார்கள். என்.ராம் அவர்கள் வயர் இணையதளத்தில், ‘குற்றம் நடைபெற்றதாக கருதப்படும்பட்சத்தில், அந்த குற்றத்தை செய்தவராக கருதப்படுபவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அந்த விளக்கத்திற்கு பிறகு, இறுதியாக ஒரு முடிவோ தண்டனையோ வழங்கப்படவேண்டும். ஆனால் விகடன் விவகாரத்தில், எடுத்த எடுப்பிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பின்னர், விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை. இது அப்பட்டமாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குகிற விஷயம்.

நாங்கள் தவறே செய்தாலும்கூட, அதை பற்றி பத்திரிகைத்துறை வாய்திறக்கக் கூடாது என்ற மனநிலையில் இருக்கின்றனர். இன்றைக்கு ஆங்கில ஊடகங்களும், இந்தி ஊடகங்களும் எப்படி மாறியிருக்கின்றன என்பதை பார்க்கிறோம். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களும் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் பாஜக அரசுக்கு இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் விகடனுக்கு இப்படி ஒரு மிரட்டல். இது தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட மிரட்டல். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் விகடனுக்கு நேர்ந்தது தான் உங்களுக்கும் நேரும் என்று உணர்த்தியிருக்கிறார்கள். அப்படியான ஒரு விஷயத்துக்கு தமிழ்நாடு இடம் அளிக்கக் கூடாது. இங்கே கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்க முடியாது. இங்கு எல்லா பத்திரிகையாளர்களும் இணைந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.” என்றார்.
அடுத்ததாகப் பேசிய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அரசு நம்மை வலுக்கட்டாயமாக தள்ளியுள்ளது. தகவல் தொடர்பு விதி 69ன் படி, நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் ஆனந்த விகடனுடைய இணையதளத்தை முடக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க சட்டவிரோதம். சட்டப்படி மூன்று காரணங்களுக்காக இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஒன்று, இறையாண்மையை பாதிப்பதாக இருந்திருக்க வேண்டும். இரண்டு, இரு நட்பு நாடுகளுடைய உறவை பாதிப்பதுபோல இருந்திருக்க வேண்டும்.

மூன்று, நாட்டின் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள கார்ட்டூன் எந்த காரணத்துக்காக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. முதலில் முடக்கிவிட்டு, நோட்டீஸ் அனுப்பி நம்மை போராட்டத்தை நோக்கி தள்ளியுள்ளனர். வட இந்திய பத்திரிகைகளை ஒன்றிய அரசு மிரட்டிக்கொண்டிருப்பதை போல, முதன்முறையாக தமிழக பத்திரிகையை நோக்கி அவர்களுடைய நடவடிக்கையை பாய்ச்சியுள்ளனர். இதனை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்றார்.