விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்!
விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Vikatan Plus இதழில் வெளியான ஒரு கார்ட்டூன்தான் விகடன் தளத்தின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தால் அதை கண்டிக்கிறோம் என அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டன ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் மன்றத்தின் அழைப்பில், “விகடன் குழுமத்திற்கு தோள் கொடுக்க, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைவரையும் அழைக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
அது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனைத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துரிமையை பாதுகாக்க, நூற்றாண்டு கண்ட விகடன் நிறுவனத்துடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.” எனப் பதிவிட்டிருந்தனர்.
அறிக்கை பின்வருமாறு:
விகடன் நிறுவனத்தின் இணையதளம் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் முடக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். இதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியர்கள் நடத்தப்பட்டவிதம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை.
இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் வகையில் விகடன் குழுமத்தின் ஒரு அங்கமான விகடன் இணைய இதழில் ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் விகடன் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதினர்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை, கேலிச்சித்திரம் வெளியிட்ட விகடன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் மற்றும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். மாநில பாஜக தலைவர்கள் பலர், விகடன் நிறுவனத்திற்கு எதிராக அருவெறுக்கத்தக்க கருத்துகளை கூறிவந்தனர்.

“இந்நிலையில், நேற்று (15.02.25) விகடன் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் விகடன் இணையதளம் வேலை செய்யவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ளனர். முடக்கம் தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவ்வாறாக தகவல்கள் வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலிச்சித்திரம் என்பது இதழியல்துறையின் பிரிக்க முடியாத அங்கமாகும். மிகவும் சிக்கலான கருத்துகளை கேலிச்சித்திரம்_ மூலம் மக்களுக்கு எளிதில் புரிவைக்கலாம் என்ற வகையில் அது பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான கருத்து ஆயுதமாகும். அதை முடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை முடக்கும் செயலாகும். ஆகவே, விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனைத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துரிமையை பாதுகாக்க, நூற்றாண்டு கண்ட விகடன் நிறுவனத்துடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.”