வேலூர்: `கலகலத்துப் போன மாநாடு’ – சொதப்பிய கே.சி.வீரமணி, அப்செட் எடப்பாடி?

வேலூர் கோட்டை மைதானத்தில், நேற்று (பிப்ரவரி 16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, வேலூர் மாநகர் மாவட்ட செயலாளரின் அலுவலகத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி `அம்மா இலவச மருத்துவ ஆலோசனை மையத்தை’ தொடங்கி வைத்தார். அந்தப் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சுமார் 50 பேர் மட்டுமே இருந்தனர். தொண்டர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆரவாரமாக வந்த அ.தி.மு.க நிர்வாகிகளை அலுவலகத்துக்குள் வர பவுன்சர்கள் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பத்திரிகை நிருபர்கள், ஊடகவியலாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியபோது, உடன் வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டதால் பரபரப்பு கூடியது.

அதைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் முக்கிய நிர்வாகிகளையே உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி `பத்திரிகையாளர்கள் வரத் தேவையில்லை. நீங்கள் போகலாம்’ என்றார். பதிலுக்கு பத்திரிகையாளர்களும் `எதற்கு அழைப்பு கொடுத்தீங்க..’ எனக் கேட்டு வீரமணியிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநாட்டு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஏற்பாடுகள் மிக மோசமாக செய்யப்பட்டிருப்பதாக கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களிடம் கடிந்துகொண்டாக கூறுகின்றனர்.

பத்திரிகையாளர்கள் மேல் கை வைத்த கே.சி.வீரமணி

அது மட்டுமல்லாமல், எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது அருகிலேயே நாற்காலி போட்டு ஏறி நின்ற இளைஞர் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

“இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை மாநாடு பெயருக்கேற்ப இல்லாததும் எடப்பாடியை கோபமடையச் செய்தது. இளைஞர்கள் ஓரளவு அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இளம் பெண்களின் தலைகளும் தென்பட்டது. இவ்வளவு சொதப்பலால், `கலகலத்துப் போன மாநாட்டை நடத்தாமலேயே இருந்திருக்கலாம். மாநாட்டின் நோக்கமும் சிதைந்துவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமியே அப்செட் ஆகி, கே.சி.வீரமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களை எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றார்” என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.