பண மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டால் திமுகவில் பதவி பறிப்பு… பாஜக-வில் அரவணைத்த அண்ணாமலை..!

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்தவர் வேதா சீனிவாசன் என்கிற வேதா ஸ்ரீனிவாஸ்.

கடந்த நவம்பர் மாதமே இவர்மீது பண மோசடி, மிரட்டல் புகார்கள் வந்ததையடுத்து தி.மு.க-வில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக, 4-12-2024 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலும் `அமைச்சரின் ஆள் நான்…’ `பண மோசடி… மிரட்டல் புகாரில் ஆளுங்கட்சிப் புள்ளி!’ என்கிற தலைப்பில் உரிய ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கத்துடன் வேதா ஸ்ரீனிவாஸ் குறித்து 2 பக்க கட்டுரை வெளியாகியிருந்தது.

பா.ஜ.க ஐடி விங், வேதா ஸ்ரீனிவாஸை கடுமையாக விமர்சித்த பதிவு

இதையடுத்து, வேதா ஸ்ரீனிவாஸ் மீது `ஒழுங்கு நடவடிக்கை’ எடுத்து கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி, கடந்த ஜனவரி 7-ம் தேதியன்றே முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து லெட்டர் கொடுத்துவிட்டு வந்திருந்தார் கைத்தறித்துறை அமைச்சரும் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளருமான ஆர்.காந்தி.

விரைவில், வேதா ஸ்ரீனிவாஸிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து செயல்பாடுகளில் இருந்தும் அவரை வெளியேற்ற தி.மு.க தலைமை `முரசொலி’யில் கட்டம் கட்டி அறிவிப்பு வெளியிட இருந்தது.

இதனிடையே, வேதா ஸ்ரீனிவாஸின் புகைப்படங்கள் மற்றும் அவர் மீதான புகார் கடிதங்களையும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்திருந்தது பா.ஜ.க-வின் ஐடி விங். “வேதா ஸ்ரீனிவாஸ் மீது சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றும் பா.ஜ.க நிர்வாகிகளே கருத்துகளை பதிவேற்றம் செய்திருந்தனர்.

வேதா ஸ்ரீனிவாஸுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய அண்ணாமலை

இந்த நிலையில், வேதா ஸ்ரீனிவாஸ் இன்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்து கொண்டார். அண்ணாமலையும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையை அவருக்கு வழங்கினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றனர். இந்த 2 பதிவுகளுமே தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பா.ஜ.க-வுக்கு எதிரான கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. `பா.ஜ.க-வின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளதாக’ தி.மு.க-வும் அட்டாக் செய்திருக்கிறது.